மோடி நினைத்தால் முடியும்!
இந்தியாவையும், இந்தியப் பிரதமரையும் இன்னொரு கோணத்தில் உலக நாடுகள் பார்க்கத் தொடங்கியுள்ளன.
மாநில முதல்வராகவும், இந்தியாவின் பிரதமராகவும் தொடர்ந்து கால் நூற்றாண்டு காலம் வெற்றிப் பவனி வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைக்கு வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடியின் தனித்துவமான சிறப்பு, அவர் தொடர்ந்து செல்வாக்குடன் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருவது மட்டும் அல்ல; இந்திய எல்லையைத் தாண்டி உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட, சர்வதேசத் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார் என்பதுதான்.
"தனது தலையீட்டினால்தான் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" துல்லியத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன'' என்று அதிபர் டிரம்ப் திரும்பத் திரும்பத் திட்டமிட்டுப் பொய்ப் பரப்புரை செய்வதையும் பொருட்படுத்தாமல் கடந்து போகும் சாதுர்யத்தை, உலகில் வேறொரு தலைவரிடம் யாரால் எதிர்பார்க்க முடியும்?. பிரதமர் மோடிக்கு எதிராக எழுப்பப்படும் அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளுக்கு அமெரிக்காவின் ஆத்திரம் கூடக் காரணமாக இருக்கலாம்.
இந்தியாவையும், இந்தியப் பிரதமரையும் இன்னொரு கோணத்தில் உலக நாடுகள் பார்க்கத் தொடங்கியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷிய - உக்ரைன் மோதலுக்கு இடைக்கால தீர்வை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று உக்ரைனும், ரஷியாவும் தெரிவித்திருக்கின்றன. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்த 26-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்து உரையாடியதில் இருந்து தொடங்கியது அதற்கான நகர்வு.
Advertisement
Advertisement
அந்தப் பேச்சுவார்த்தையின் நீட்சியாகவோ என்னவோ, அடுத்த மூன்றாவது நாள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 3-ஆம் தேதி உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டார். போரை முடிவுக்குக் கொண்டுவரப் பிரதமர் அழுத்தம் கொடுத்ததை, உக்ரைன் அதிபருடனான தனது சந்திப்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியதை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது.
"இது போருக்கான காலமல்ல'' என்று உக்ரைன்-ரஷியப் போர் தொடங்கிய சில மாதங்களில் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற எஸ்.சி.ஓ. மாநாட்டின்போது, அதிபர் புதினை வைத்துக்கொண்டே பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்தின் அடிப்படையில், அமைதியை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும், எதுவும் முனைப்புடன் முன்னெடுக்கப்படவில்லை. இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது.
கடந்த நான்கரையாண்டு கால உக்ரைன்-ரஷியப் போரால், ஒட்டுமொத்த உலகமும் கடுமையான பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது. துறைமுகங்கள் மீதும், கப்பல்கள் மீதும் இரண்டு நாடுகளும் மாறி மாறி நடத்தும் தாக்குதல்களால் அந்த நாடுகள் மட்டுமல்ல, ஏனைய உலக நாடுகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
உக்ரைனும், ரஷியாவும் முக்கியமான உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களது விவசாய நிலங்களில் பருவ மழைக்குப் பதிலாக குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கின்றன. தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், சர்வதேச அளவில் பயிர்ப் பொருள்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு, அதனால், உணவுப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. போதாக் குறைக்கு, உரத் தட்டுப்பாடும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான், உக்ரைன்-ரஷியப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் இந்தியா மட்டுமல்லாமல் துருக்கி, எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் சமரசம் ஏற்படுத்த முற்பட்டிருக்கின்றன. "எங்களுக்கு வந்திருக்கும் முன்மொழிவுகளில் இந்தியாவின் சமரசத் திட்டத்தைத்தான் சிறப்பாகக் கருதுகிறோம். அது மட்டுமல்லாமல், நியாயமான, ஏற்புடைய சமரசத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால்தான் வழங்க முடியும். அவரது முன்மொழிவுகளை நாங்கள் மட்டுமல்ல, ரஷிய அதிபர் புதினும் மறுக்க மாட்டார்'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா.
அண்மையில் மாஸ்கோவில் நடந்த 23-ஆவது வால்டாய் சர்வதேச அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, "பிரதமர் நரேந்திர மோடி ஒருவரைத்தான் நடுநிலையான முடிவெடுப்பவராக நான் கருதுகிறேன். இதை வெளிப்படையாகத் தெரிவிப்பது எனது கடமை என்று நினைக்கிறேன். விரைவிலேயே உக்ரைன்-ரஷியப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அவர் விரும்புவதற்காக, நான் அவருக்கு நன்றி கூற விழைகிறேன்'' என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்திருப்பது விரைவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
உள்நாட்டுப் பிரச்னைகளால் பிரதமர் நரேந்திர மோடியின் சர்வதேசப் பங்களிப்பு முடங்கிவிடக் கூடாது. வரலாறு காணாத வெப்பம் காரணமாக உணவுத் தட்டுப்பாட்டை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், உக்ரைன்-ரஷியப் போருக்கு இடைக்காலத் தீர்வாவது ஏற்பட வேண்டும். அந்த இரண்டு நாடுகள் மட்டுமல்ல, இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்திய சமரசத் திட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.