FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பருவமழை பொய்த்திருக்கிறது!

இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலம் முற்றுப் பெற்றிருக்கும் நிலையில், நமது நீர்த்தேக்கங்களின் கொள்ளளவுகள் கவலை அளிப்பதாக இருக்கின்றன.

10 அக்டோபர் 2026, 6:50 am IST
கோப்புப்படம்
பகிர்:

தெற்காசியாவைப் பொருத்தவரை, விவசாயிகள் மிக அதிகமாக எதிர்நோக்கிக் காத்திருப்பது தென்மேற்குப் பருவமழையைத்தான். இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலம் முற்றுப் பெற்றிருக்கும் நிலையில், நமது நீர்த்தேக்கங்களின் கொள்ளளவுகள் கவலை அளிப்பதாக இருக்கின்றன. 2026 தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தைவிட 12.6% குறைவாகக் காணப்பட்டதுதான் அதற்குக் காரணம்.

நீர்த்தேக்கங்களில் நீண்ட நாள் சராசரியை எடுத்துக் கொண்டாலும், கடந்த ஆண்டின் பருவமழைப் பொழிவுகளுடன் ஒப்பிட்டாலும் அடுத்துவர இருக்கும் ராபி சாகுபடி கவலை அளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் தென் மாநிலங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றன என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்களும், வேளாண் ஆராய்ச்சியாளர்களும்.

இந்தியாவில் உள்ள கண்காணிக்கப்படும் முக்கியமான நீர்த்தேக்கங்களைக் கண்காணிக்கும் அமைப்பான மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் கவலையளிக்கின்றன. இந்த நிலையில், வானிலை ஆய்வாளர்களும் முக்கியமான 178 நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு, பருவமழைக் காலம் முடிந்திருக்கும் நிலையில் 132.734 பில்லியன் கியூபிக் மீட்டர்கள் (பி.சி.எம்). கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தின் கொள்ளளவு 166.856 பி.சி.எம். என்றால் கடந்த 10 ஆண்டுகளின் சராசரி 151.118 பி.சி.எம்.

Advertisement

Advertisement

பிரச்னை தென்னிந்தியாவைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியாவிலும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்கிறது நீர்வள ஆணையம். ஹிமாசல், பஞ்சாப், ராஜஸ்தானை உள்ளடக்கிய வடக்குப் பகுதியில் உள்ள கண்காணிக்கப்படும் 11 நீர்த்தேக்கங்களிலும் இந்த முறை கொள்ளளவு குறைவாகத்தான் இருக்கிறது. மேற்கு இந்திய, தென்னிந்தியாவில் உள்ள 58 நீர்த்தேக்கங்களில் 50 நீர்த்தேக்கங்கள் கடந்த ஆண்டைவிடக் குறைவான கொள்ளளவே பெற்றிருக்கின்றன. இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் விவசாயம் அதிகமாக பாதிப்பை எதிர்கொள்ளாது என்று சற்று ஆறுதல் அடையலாம்.

காரீஃப் பருவப் பயிர்ப் பரப்பு இந்த முறை கடந்த ஆண்டைவிட 1.2% குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மாநிலங்களில் வறட்சி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால், இன்னொருபுறம் 6.11 லட்சம் ஹெக்டேரிலும் அதிகமான பயிர்ப் பரப்பு அதிக மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் காரீஃப் பருவ நெல் பயிர்ப் பரப்பு 4% குறைந்திருக்கிறது.

2026-27 நிதியாண்டுக்கான உணவு உற்பத்தி இலக்கை, மத்திய அரசு குறைத்திருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

அதுமட்டுமல்ல, உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரிப்பும், ஊரகப் பகுதிகளில் அதிகரித்த வேலையின்மையும் இதனால் ஏற்படக்கூடும் என்றும் வேளாண் பொருளாதார நிபுணர்கள் அரசை எச்சரிக்கிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 358 தாலுகாக்களில், 265 தாலுகாக்கள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சோயா பீன்ஸ், பருத்தி, துவரம் பருப்பு, சோளம் உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படும் மராத்வாடா, விதர்பா பகுதிகள் மழை இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் சோயா பீன்ஸ் உற்பத்தியில் 48%, துவரம்பருப்பு சாகுபடியில் 39% இந்தப் பகுதிகளில்தான் பயிரிடப்படுகின்றன.

சாகுபடி பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை; பருப்பு விதைகள், சமையல் எண்ணெய், கால்நடைத் தீவனம் உள்ளிட்டவற்றின் விதைகளும் அதிகரிக்கும் என்பதும், அது ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதிக்கும் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனால், மகாராஷ்டிரம் உள்பட எந்த மாநிலத்தில் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், அது ஒட்டுமொத்த தேசத்தையும் பாதிக்கும்.

பருவமழைப் பொழிவை நம்பி இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஓராண்டில் ஏற்படும் லாபகரமான விளைச்சல், அடுத்த பருவத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதாக இருக்காது. இது விளைச்சலுக்கு மட்டுமல்லாது, நீர்ப்பிடிப்புக்கும் பொருந்தும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நீலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவுக்கு பருவமழையின்போது அது ஈடுகட்டப்படுவதில்லை. போதாக்குறைக்கு, நமது விவசாயிகள் அதிக அளவு பாசன நீர் தேவைப்படும் நெல், கோதுமை, பருப்பு போன்ற பயிர்களை மட்டுமே நாடுகிறார்கள். அதிலிருந்து மாற்றுப் பயிர்களுக்கு அவர்களை நகர்த்த விடாமல் குறைந்தபட்ச ஆதரவு விலை தடுக்கிறது.

வறட்சியை எதிர்கொள்வதற்கு, ஒவ்வொரு முறை இழப்பு ஏற்படும்போதும் அரசு வழங்கும் மானியம் அல்லது இழப்பீடு தீர்வாகிவிடாது. வேளாண் பெருமக்களின் விவசாய முறையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் பயிர்களும் மாற்றம் பெற வேண்டும். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது கண்காணிக்கப்படுவதுடன், இலவச மின்சாரம் என்பது சில விதிமுறைகளுக்கும், வரம்புகளுக்கும் உட்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

பருவ நிலையையும், உரத்தின் விலையையும் இந்திய அரசு நிர்ணயிக்க முடியாது. மேற்காசியப் போர் காரணமாக ரசாயன உரத்தின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. சல்ஃபர் விலை அதிகரிப்பும், யூரியா உற்பத்தியின் தடங்கலும் மத்திய அரசால் சமாளிக்கப்படுகிறது என்றாலும், அதற்கான இழப்புகள் வேறொரு வகையில் பொதுமக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, இந்தியா எதிர்கொள்ள இருக்கும் 'வறட்சி' சார்ந்த பிரச்னைகளுக்கு விடைகாண வேண்டிய நேரம் இது. இனியும் வாளாவிருக்கலாகாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments