மக்கள் நலனுக்கு முன்னுரிமை!
பாக்கெட் உணவுப் பொருள்களில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு இருப்பதைக் குறிக்கும் அபாய எச்சரிக்கை லேபிள்கள் பற்றி...
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் (3 எஸ் அண்ட் அவர் ஹெல்த்) பாக்கெட் உணவுப் பொருள்களில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு இருப்பதைக் குறிக்கும் அபாய எச்சரிக்கை லேபிள்களை முன்பக்கத்தில் ஒட்டக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2024-இல் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தது.
பாக்கெட் உணவுகளில் அதிகப்படியான சர்க்கரை அல்லது கொழுப்பு இருந்தால், நுகர்வோர், குறிப்பாக குழந்தைகள் எளிதில் அதைக் கண்டறியும் வகையில் லேபிள்கள் இருக்க வேண்டும் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கொண்டுவந்த சில பரிந்துரைகளில், நிறுவனங்களுக்கு சாதகமான ஓட்டைகள் இருப்பதாகவும் அந்த நிறுவனம் குற்றம்சாட்டியது.
அத்துடன், 2 சத்துகள் அதிகமாக இருந்தால் மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற அரசின் தளர்வை இந்த அமைப்பு எதிர்த்ததுடன், ஒரு பொருளில் வெறும் சர்க்கரை மட்டுமே அதிகமாக இருந்தாலும், அது சர்க்கரை நோயை உண்டாக்கும் அபாயம் கொண்டது என்று வாதிட்டது. உற்பத்திப் பொருள்களில் எச்சரிக்கை லேபிள் குறித்த பிரச்னைகளும், விவாதங்களும் தற்போது தொடங்கியது இல்லை. இதற்கு நீண்டகால வரலாறு உள்ளது.
Advertisement
Advertisement
1927 மற்றும் 1938-ஆம் ஆண்டுகளில், நச்சுப் பொருள்கள் மற்றும் மருந்துகளில் -குழந்தைகளுக்கு ஆபத்தானது - பக்கவிளைவுகள் கொண்டது போன்ற லேபிள்கள் அமெரிக்காவால் சட்டபூர்வமாக்கப்பட்டன. பிறகு, சிகரெட் பிடிப்பது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எச்சரிக்கை வாசகம் உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் 1966-இல் கட்டாயமாக்கப்பட்டது. இந்தியாவில் 1975-இல் 'சிகரெட் சட்டம்' மூலம் முதன்முறையாக சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்ற விதி வந்தது. இது 2003-இல் வலுவாக்கப்பட்டது.
பிறகு, 2009-இல் புகைப்படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்களும், 2016 முதல் பெரிய படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. அமெரிக்காவில் 1990-இல் கொண்டுவரப்பட்ட ஊட்டச்சத்து லேபிளிங் மற்றும் கல்விச் சட்டத்தின் மூலம் உணவுகளின் பின்புறம் கலோரி மற்றும் சத்துகள் விவரப் பட்டியலை அச்சிடும் முறை உலக அளவில் பிரபலமானது. இதன் தொடர்ச்சியாகத்தான், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பண்டங்களுக்கான (சிப்ஸ், குளிர்பானங்கள், இனிப்புகள்) எச்சரிக்கை லேபிள் பிரச்னை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பல ஆண்டுகளாக லேபிளிங் முறையை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகிறது. அதன் 2018-19ஆம் ஆண்டு அறிக்கையில் முதன்முதலில் ஆற்றல், நிறைவுற்ற கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு, சேர்க்கப்பட்ட சர்க்கரை, சோடியம் குறித்த முன்பக்க அறிவிப்புகள் முன்மொழியப்பட்டன.
அதன் 2022 வரைவு இந்திய ஊட்டச்சத்து மதிப்பீட்டை முன்மொழிந்தது. இதில், தொகுக்கப்பட்ட உணவுகளுக்கு 0.5 முதல் 5 நட்சத்திரங்கள் வரை மதிப்பீடு வழங்கப்பட்டது. கேரள தன்னார்வ தொண்டு நிறுவன வழக்கில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அளித்த, வயதுவந்த ஒருவர் தினமும் உட்கொள்ளவேண்டிய பரிந்துரைக்கப்பட்ட கலோரி மற்றும் முக்கிய ஊட்டச்சத்துகளின் அளவைக் காட்டும் ஊட்டச்சத்து தகவல் அட்டவணை குறித்த பிரமாணப் பத்திரத்தை கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து, ஆணையம் நட்சத்திர மதிப்பீட்டை கைவிட்டு, அதிக கொழுப்பு, அதிக இனிப்பு, அதிக உப்பு, அதிக இனிப்புள்ள பானம் என்ற 4 விதமான எச்சரிக்கை அறிவிப்புகளைக் கொண்ட சிவப்பு அறுகோண லேபிளையும், அதை இரண்டு கட்டமாக அமல்படுத்துவதையும் முன்மொழிந்தது.
முதல் கட்டத்தில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகிய மூன்றில், இரண்டு பொருள்களில் அதிக அளவு இருந்தால் மட்டுமே உணவுப் பொருள்களில் எச்சரிக்கை இடம்பெறும். இரண்டாம் கட்டத்தில் மேற்கண்ட மூன்று பொருள்களில் ஒன்று மட்டும் அதிக அளவு இருந்தாலும் எச்சரிக்கை லேபிள் பொருந்தும் என்கிறது அந்த முன்மொழிவு.
இதற்குத்தான் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவின் தொகுக்கப்பட்ட உணவுத் துறை ரூ. 10 ஆயிரம் கோடி அளவில் உள்ளது. இது பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டையும், பல லட்சம் பேரின் வேலைவாய்ப்பையும் உள்ளடக்கியது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கொண்டுவந்துள்ள புதிய விதிகள் மிகவும் கடுமையானவை என்றும், இதனால், தங்களின் 80 சதவீத தயாரிப்புகள் சிவப்பு நிற எச்சரிக்கை லேபிளை பெறவேண்டியிருக்கும் என்றும், அது விற்பனையைப் பாதிக்கும் என்றும் பெருநிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல், சுகாதார நிபுணர்களின் கவலை, நீதிமன்றத்தின் பொறுப்பு ஆகியவற்றையும் அரசு புறந்தள்ளிவிட முடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தன்னார்வலர்கள் குறிப்பிடுவது போல பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவது அவசியம்.
*********
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றனவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
திருக்குறள் (எண் 511) அதிகாரம்: தெரிந்து வினையாடல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.