சிபிஎஸ்இ தளத்தில் பயங்கர குளறுபடிகள்! தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வலுக்கும் குரல்!
சிபிஎஸ்இ தளத்துக்கு என்ன ஆனது, அதனை ஹேக் செய்ய முடியும் என முன்பே +2 மாணவர் சொன்னது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது என்பது குறித்து..
சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஐஐடி-மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி தெரிவித்த நிலையில், சிபிஎஸ்இ தளம் பாதுகாப்பற்று இருப்பதாக மாணவர் ஏற்கனவே அனுப்பிய மின்னஞ்சல் வெளியாகி கடும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
சிபிஐ இணையதளத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறுகளை கண்டறிந்து சீராக்க மெட்ராஸ் ஐஐடி, கான்பூா் ஐஐடி குழுக்களிடம் உதவி கோரப்பட்டிருந்த நிலையில், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி வெளியிட்ட தகவலில், சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆனால், அது உண்மையில் அதிர்ச்சியான தகவல் இல்லை, சில நாள்களுக்கு முன்பே, 12ஆம் வகுப்பு படித்த மாணவர், பொழுதுபோக்குக்காக சிபிஎஸ்இ தளத்தை முடக்க முயன்றதாகவும், அப்போது அதில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது குறித்து சிஇஆர்டி-க்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்ததாக அந்தக் கடிதத்தின் க்ரீன் ஷாட்டுடன் தகவலை வெளியிட்டு அதிர்ச்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
தான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு வந்த பதிலில், என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என்பது குறித்து ஸ்கிரின் ரெக்காடிங் கேட்டிருந்தார்கள். அதன்படி முக்கிய தகவல்களையும் அனுப்பியிருந்தேன், எனது சோதனையில், மிக எளிதாக சிபிஎஸ்இ இணையதளத்தில் சென்று மாணவர்களின் மதிப்பெண்களை மாற்றியமைக்க முடியும் என்பதைக் கண்டறிந்தேன்.
அது மட்டுமல்லாமல், சிபிஎஸ்இ இணைதயளத்தில் இணையவழியில் விடைத்தாள் திருத்தும் பக்கத்தைக்கூட என்னால் திறந்து யாருடைய மதிப்பெண்களையும் மாற்ற முடியும். எந்த ஆசிரியரின் பாஸ்வேர்டையும் மாற்றிவிட முடியும் என்றும் மாணவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்திருக்கிறார்.
இணையதளம் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று முன்கூட்டியே எச்சரித்திருந்தும், அதில் பல பிரச்னைகளை அவர்களால் சரி செய்ய இயலவில்லை என்றும் அந்த மாணவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆனால், நிலைமை கைமீறி, சிபிஎஸ்இ இணையதளம் தாறுமாறாக செயல்படத் தொடங்கி மாணவர்களும், பெற்றோரும் பரிதவித்துப்போயினர்.
அப்போதுதான், விடைத்தாள் மறுமதிப்பீடு நடைமுறை கோளாறுகள் இல்லாமல் நடைபெறுவதற்கு சிபிஎஸ்இ-க்கு உதவ, மெட்ராஸ் மற்றும் கான்பூா் இந்திய ழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் (ஐஐடி) பேராசிரியா்கள், தொழில்நுட்ப நிபுணா்கள் அடங்கிய குழுவை நியமிக்க தா்மேந்திர பிரதான் உத்தரவிட்டார்.
ஐஐடி மெட்ராஸ், ஐஐடி சென்னை.. இதிலும் குழப்பம்!
ஐஐடி மெட்ராஜ், கான்பூர் பற்றி, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், "தொழில்நுட்பக் கோளாறு குறித்து ஆராயுமாறு ஐஐடி மெட்ராஸ் இயக்குநரிடம் நான் கேட்டுக்கொண்டேன். சிபிஎஸ்இ இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை ஐஐடி கான்பூர், ஐஐடி சென்னை மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை ஆராயும். ஆனால் இன்று அது சீராக இயங்குகிறது. மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்ட நகல் வழங்கப்படும். அதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாங்கள் அந்தப் பிரச்னையைக் கவனிப்போம். அரசு இதை விரிவாக ஆராய்ந்து வருகிறது. ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூரின் வழிகாட்டுதலுடன் இது தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
இந்த விடியோவைப் பகிர்ந்திருக்கும் பலரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஐஐடி மெட்ராஸ் என்று கூறிவிட்டு மீண்டும் ஐஐடி சென்னை என கூறியிருக்கிறாரே, ஏன் இந்தக் குழப்பம்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஹேக் செய்யப்பட்டது!
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் கூறுகையில், தற்போது சிபிஎஸ்இ இணையதளம் சீராக இயங்கி வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக, இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன என்பதை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்தனர். இணைதயளம் சைபர் தாக்குதல் அல்லது ஹேக் செய்யும் நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது குறித்தும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது.
அதில் உள்ள குறைபாடுகள் களையப்படுகிறது. சைபர் தாக்குதல் என்றால், பணம் திருடப்படவில்லை. ஆனால், மாணவர்கள், பெற்றோர் இணையத்தில் விண்ணப்பிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது. சில பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கிறோம் என்றார்.
சிபிஎஸ்இ இணையதளத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகள் முழுமையாக பட்டியலிடப்பட்டு, அவற்றை சரி செய்யும் அனைத்து விவரங்களும் அறிக்கையாக வழங்கப்படும், எதிர்காலத்தில் இதுபோன்றதொரு பிரச்னை எழாமல் தடகக் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளுக்கு பிந்தைய மறுமதிப்பீடு செயல்முறையின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட அதிக கட்டணத் தொகை திருப்பியளிக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்திருக்கிறது.
என்னதான் பிரச்னை?
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, மதிப்பெண் சரிபாா்ப்பு மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு சிபிஎஸ்இ வலைதளத்தை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக மாணவா்களும், பெற்றோா்களும் புகாா் தெரிவித்தனா்.
விடைத்தாள்கள் மங்கலாக இருந்தது, தங்களுடைய விடைத்தாள்கள் மாற்றப்பட்டிருந்தன என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்த சில மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், சில மாணவா்களுக்கு குறைந்த கட்டணம் விதிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்தது. அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், அதனை திரும்ப வழங்கும் பணிகள் தொடங்கின.
ஏற்கனவே நீட் தேர்வு ரத்தால் கடும் விமர்சனை எதிர்கொண்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம், சிபிஎஸ்இ இணையதளம் மற்றும் போதுமான பயிற்சி இன்றி ஒஎஸ்எம் முறையில் விடைத்தாள்களை திருத்தி, பல மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
ஏன் இப்படி மாணவர்கள் எழுதும் தேர்வு, தேர்வு முடிவுகள் போன்றவற்றில் மத்திய அரசு அலட்சியத்துடன் நடந்துகொள்கிறது என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
What happened to the CBSE website? Was it ignored when a +2 student said it could be hacked?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.