முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு யார்?

கொளத்தூரில் வெற்றிபெற்ற வி.எஸ். பாபு பற்றி...

வி.எஸ். பாபு - X
பகிர்:

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபு தோற்கடித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. கொளத்தூரில் காலை முதலே திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து வந்தார்.

இந்த நிலையில், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் முதல்வர் ஸ்டாலின் தோல்வியைச் சந்தித்துள்ளார். கிட்டத்திட்ட 9,122 வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ். பாபு வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வென்ற ஸ்டாலின், நான்காவது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

யார் இந்த வி.எஸ். பாபு?

ஒரு காலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் முக்கிய போர்ப் படைத் தளபதியாக இருந்தவர் வி.எஸ். பாபு.

திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய வி.எஸ். பாபு, அக்கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

2006 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு புரசைவாக்கத்தை பிரித்து கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது.

அப்போதுமுதல் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டு வருகிறார். 2011 ஆம் ஆண்டு ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டபோது, அவர் வெற்றி பெற கடுமையாக களப் பணியாற்றியவர் வி.எஸ். பாபு.

பின்னர், அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் வி.எஸ். பாபு இணைந்தார். அங்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்னதாக தவெகவில் இணைந்த வி.எஸ். பாபு, ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் களமிறக்கப்பட்டார்.

summary

Who is V.S. Babu, who defeated Chief Minister Stalin?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.