பொள்ளாச்சி: அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு?
அதிமுக கூட்டணியில் பொள்ளாச்சியில் அதிமுகவே போட்டியிடும் வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் திமுக அல்லதுகொமதேக போட்டியிட வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பொள்ளாச்சி வருவாய்க் கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. பொள்ளாச்சி என்றாலே தென்னை மரம், இளநீர், தேங்காய் என்பது நினைவில் வரும். எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் தொகுதி. சட்டப் பேரவைத் துணைத் தலைவரின் தொகுதி என்பதால் இது விஐபி தொகுதியாகப் பார்க்கப்படுகிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பொள்ளாச்சி தொகுதியில் நகரங்களைவிட கிராமங்கள் அதிகம். பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகள், நெகமம் பேரூராட்சி ஆகியவை உள்ளன. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அரசம்பாளையம், ஆண்டிபாளையம், செட்டிக்காபாளையம், தேவணாம்பாளையம், தேவராயபுரம், கோவிந்தாபுரம், கக்கடவு, காணியாலம்பாளையம், கப்பளாங்கரை, காட்டம்பட்டி, கொண்டம்பட்டி, கோதவாடி, கோவில்பாளையம், குளத்துப்பாளையம், குருநெல்லிபாளையம், குதிரையாளம்பாளைம், மன்றாம்பாளையம், மெட்டுவாவி, மேட்டுப்பாளையம், முள்ளுப்பாடி, நல்லட்டிபாளையம், பனப்பட்டி, பெரியகளந்தை, சிறுகளந்தை, சோளனூர், சூலக்கல், வடசித்தூர், வரதனூர் போன்ற ஊராட்சிகள் அடங்கும்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள சந்திராபுரம், சின்னநெகமம், வகுத்தம்பாளையம், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், காபிலிபாளையம், ஒக்கிலிபாளையம், குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், வெள்ளாளபாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன்முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகள் உள்ளன.
தொகுதியின் சமூக, தொழில் நிலவரம்
கவுண்டர் சமூகத்தினர் அதிகளவிலும், செட்டியார் சமூகத்தினர் அதற்கு அடுத்தபடியாகவும், நாடார், பட்டியல் இனத்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவிலும் வசித்து வருகின்றனர். தென்னை விவசாயம், தென்னை சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ள பகுதி. பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகம். தென்னைநார், நார்கட்டிகள், தென்னைநார் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் போன்றவை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ரூ.2,000 கோடிக்கும் மேல் தென்னை நார் சார்ந்த ஏற்றுமதி நடைபெறுகிறது. பொள்ளாச்சி சுப்ரமணியம் சுவாமி கோயில், மாரியம்மன் கோயில் போன்றவை பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களாகும். பொள்ளாச்சி அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டவையாகும்.
வாக்காளர் விவரம்
ஆண்கள் -1,08,302, பெண்கள் -1,17,443, மூன்றாம் பாலினத்தவர்கள் -32, மொத்தம்-2,25,777.
கடந்த தேர்தல்கள்
கடந்த 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 8 முறை அதிமுகவும், ஒரு முறை சேவல் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக ஜெ.அணியும், மூன்று முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
1967 - ஏ.பி.சண்முகசுந்தர கவுண்டர்(திமுக)
1971 - ஏ.பி.சண்முகசுந்தர கவுண்டர் (திமுக)
1977 - ஓ.பி.சோமசுந்தரம் (அதிமுக)
1980 - எம்.வி. ரத்தினம் (அதிமுக)
1984 - எம்.வி. ரத்தினம் (அதிமுக)
1989 - வி.பி. சந்திரசேகர் (அதிமுக ஜெ.அணி)
1991 - வி.பி. சந்திரசேகர் (அதிமுக)
1996 - ராஜூ (திமுக)
2001 - பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)
2006 - பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)
2011 - முத்துகருப்பண்ணசாமி (அதிமுக)
2016 - பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக)
2016 தேர்தல்
பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக ) - 78,553 வாக்குகள்
தமிழ்மணி (திமுக) - 65,185 வாக்குகள்
வித்தியாசம் - 13,368 வாக்குகள்
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்
நீண்டகால கோரிக்கையாக இருந்த பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரி கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறன. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 5 மாடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டடம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் சிக்கலான பிரசவத்திற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகிறது. மற்றொரு நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு நடைபெற்றது.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் அமைக்க இரு மாநில அரசுகள் சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பொள்ளாச்சி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொள்ளாச்சி -பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு புறவழிச்சாலை பணிகள் தொடங்கியுள்ளன. பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப் பகுதிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிறைவேற்றப்படாத திட்டங்கள்
மயிலாடுதுறை, தென்காசி போன்ற சிறிய பகுதிகள்கூட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டும் மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையிலும் தகுதி இருந்தும் பொள்ளாச்சியானது தனி மாவட்டமாக அறிவிக்கப்படாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது பொள்ளாச்சி மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்
அதிமுக கூட்டணியில் பொள்ளாச்சியில் அதிமுகவே போட்டியிடும் வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் திமுக அல்லது கொமதேக போட்டியிட வாய்ப்புள்ளது.
வெற்றி வாய்ப்பு
தற்போது பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பொள்ளாச்சி வி.ஜெயராமன், பொள்ளாச்சி தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். ஒருமுறை உடுமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் உள்ளார். இந்தத் தொகுதியிலேயே அவர் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அதிகமான திட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக பிஏபி திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உதவியுடன் இருமாநில முதல்வர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார். திருவனந்தபுரத்தில் இருமாநில முதல்வர் சந்திப்பு நடைபெற்று இருமாநில உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை மாவட்டம் ஆக்க கோரிக்கை வைத்து பலமுறை சட்டப்பேரவையில் பேசியுள்ளார். சென்னை, மதுரையில் மட்டுமே இருக்கும் சிக்கலான பிரசவத்திற்கான மருத்துவமனையை பொள்ளாச்சியில் அமைக்க முயற்சி செய்து, தற்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி தொகுதியில் கிராமப் பகுதிகளில் 7 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவடைந்தால் கிராமங்களுக்கு தினசரி குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது. கரோனா கால கட்டத்தில் தொடர்ந்து 45 நாள்கள் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார். இவை அதிமுகவிற்கு பலமாக உள்ளன. அதேநேரம் பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படாமல் இருப்பது, தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் போன்றவை அதிமுகவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகின்றன.