இரட்டை என்ஜின் அரசு எனக் கூறுவது வளர்ச்சிக்காக அல்ல! ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...
"மத்தியில் கொண்டுவரக் கூடிய மக்கள் விரோத நடவடிக்கைகளை மாநில அரசுகள் அப்படியே ஏற்றுக் கொள்வதைத் தான் இரட்டை என்ஜின் அரசு என பாஜக கூறுகிறது; அவர்களது நோக்கம் வளர்ச்சிக்காக அல்ல' என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த அவர் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைந்த நிலையில் தமிழக தேர்தல் களம் எப்படி உள்ளது?
Advertisement
தமிழக தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும்.
இதற்கு என்ன காரணம்?
சமூக நலத் திட்டமும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை திமுக எதிர்ப்பதும் முக்கியக் காரணங்களாகும். நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும் என்பதும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் சீர்குலைப்பு, மின் விநியோகத்தை தனியார்மயமாக்கல் திட்டம் ஆகிய விவகாரங்களில் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு கடைப்பிடிப்பதுமே காரணம்.
தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு குறைவான இடங்கள் வழங்கப்பட்டதால் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளதா?
தொகுதி உடன்பாடு எண்ணிக்கை, எம்எல்ஏ, எம்.பி.க்கள் எண்ணிக்கையை வைத்து இடதுசாரிகளின் பலத்தை கணக்கிடக் கூடாது. அகில இந்திய அளவில், மாநில அளவில் மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவது இடதுசாரிகள்தான்.
கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலைப்போல் பேரவைத் தேர்தலிலும் பாஜக தடம் பதிக்க வாய்ப்பு உள்ளதா?
கேரளத்தில் இடதுசாரி முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 90 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறை ஆட்சியமைக்கும். கேரளத்தில் பாஜக தடம் பதிக்கவே முடியாது. அங்கு அதற்கான சூழல் இல்லை.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பாஜகவுக்கு சாதகமாக அமையாதா?
மாநில அரசின் கொள்கைகளை எதிர்த்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராகவும், மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து பாஜகவுக்கு எதிராகவும் இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் போட்டியிடுகிறார்கள். அங்குள்ள அரசியல் களம் வேறு. இங்குள்ள அரசியல் களம் வேறு. யாருக்கு சாதகம், பாதகம் எனப் பார்க்க இயலாது.
தமிழக தேர்தல் பிரசாரம் தில்லியை நோக்கி நகர்ந்ததால் மாநில பிரச்னைகள் முன்னிலை பெறவில்லையா?
நெல் கொள்முதலில் ஊக்கத்தொகையைக் குறைக்க கோரும் விவகாரம் விவசாயிகளையும், புதிய ஊரக வேலை உறுதித் திட்டம், புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களையும் பாதிக்கின்றன. இவையெல்லாம் மத்திய அரசின் நடவடிக்கை என்பதால் தேசிய பிரச்னையாகிவிட்டது. மத்திய பாஜக அரசு எடுக்கும் மக்கள்விரோத நடவடிக்கைகளை மாநிலத்தில் அதிமுக ஆதரிக்கிறது. மத்தியில் கொண்டுவரக் கூடிய மக்கள் விரோத நடவடிக்கைகளை மாநில அரசுகள் அப்படியே ஏற்றுக் கொள்வதைத்தான் இரட்டை என்ஜின் அரசு என பாஜக கூறுகிறது. அவர்களது நோக்கம் வளர்ச்சிக்காக அல்ல. புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மூடி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வந்ததை என்ஆர் காங்கிரஸ் - பாஜக அரசு நிறுத்திவிட்டது. இதுபோன்று செயல்படுவதுதான் இரட்டை என்ஜின் அரசாங்கமாகும்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக கூட்டணி ஆதரவு அளிக்கவில்லை என்று பாஜக குற்றம்சாட்டுகிறதே?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் பாஜக தலைமை உண்மையை மூடிமறைக்கிறது. கவனத்தை திசைதிருப்பி மறுசீரமைப்புக்கு வழிகோல நினைக்கிறது.
மகளிர் இடஒதுக்கீட்டுக்காக ஆரம்பம் முதலே குரல் எழுப்பிய இடதுசாரிகள் இப்போது எதிர்க்க முற்பட்டிருப்பது ஏன்?
2023-இல் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின்போது 2024- மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் கோரின. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்புதான் நிறைவேற்றப்படும் என பாஜக கூறியது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பை முடிக்காமலேயே இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்தது.
இது மட்டும்தான் காரணமா?
மகளிர் இடஒதுக்கீட்டையும், தொகுதி மறுசீரமைப்பையும் இணைப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மகளிருக்கு இடஒதுக்கீட்டை அமலாக்கக் கூடாது என்பதே பாஜகவின் சதித்திட்டமாகும். மேற்கு வங்கம், தமிழக தேர்தலில் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவே இதை பாஜக செய்துள்ளது.
நான்கு முனைப் போட்டியில் விஜய்யின் வாக்கு சதவீதம் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் விஜய் கூறினார். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரம், விவசாயிகளின் நெல் கொள்முதலுக்கு ஊக்கத் தொகை குறைப்பு விவகாரம் ஆகியவற்றில் மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் கொடுக்கவில்லை. திரைக்கதை வேறு, தெருக்கதை வேறு என்பதைப்போல், விஜய்யின் போட்டி யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. இளைஞர்களை விஜய் தவறாக வழிநடத்துகிறார். மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வை விஜய் கூறுவதில்லை. கூட்டம் கூடுவதை வைத்து எந்தவித முடிவுக்கும் வர முடியாது.
நேர்காணல்: அ.சர்ப்ராஸ்