மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் தொழிலாளர் குழந்தைகள் 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மத்திய அரசு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது தொடர்பாக...
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின், 1-ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2026-27 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி சுமையைப் போக்க, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் ரூ.1000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மத்திய நல ஆணையர் என். மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Advertisement
Advertisement
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகள் 2026-2027- ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்காக ஜூன் 1 ஆம் தேதி முதல் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். மேலும் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் பெற அணுக வேண்டிய முகவரி : என். மணிகண்டன் , மத்திய நல ஆணையர், மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சிட்கோ கட்டடம் கிண்டி, சென்னை - 600 032 என்ற முகவரியிலோ அல்லது nsp-lwo.chennai@zohomail.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 044-29530169 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாணவர்கள் விண்ணப்பிக்கும் நடைமுறை
மாணவர்கள் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒருமுறை பதிவு (ஓடிஆர்) மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். இந்த ஒருமுறை பதிவு எண் மாணவரின் பின்தொடர் கல்வியாண்டுகளுக்கும் செல்லுபடியாகும்.
ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில், தங்கள் சேமிப்புக் கணக்கை தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளுடன் பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமாக, விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை தங்கள் சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவர்.
மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல், தொழிலாளர் அடையாள அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்னர் விண்ணப்பத்தை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள்
கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்ற மாணவர்கள் தங்களது முந்தைய உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்(என்எஸ்பி, கல்வி தொடர்பான விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வருமானச் சான்றிதழ் ஆவணங்களைப் புதுப்பித்து சமர்ப்பிக்க வேண்டும்.
உதவி மற்றும் விளக்கங்கள்
கல்வி உதவித்தொகை விண்ணப்ப செயல்முறை தொடர்பாக ஏதேனும் விளக்கம் அல்லது உதவி தேவைப்பட்டால், விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்:
* கல்வி நிறுவன முனைய அலுவலர் (Institute Nodal Officer)
* அருகிலுள்ள பீடி, திரைப்படம் தொழிலாளர் மருத்துவ மையம் (Beedi,Cine Dispensary)
* தொழிலாளர் அமைச்சகம், சென்னை மண்டலம் (Labour Welfare Organisation,Chennai Region)
* மின்னஞ்சல் முகவரி: nsp-lwo.chennai@zohomail.in
மேலும், இது குறித்து அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடையே தொழிலாளர் கல்வி உதவித்தொகைத் திட்டம் தொடர்பான தகவல்களை தெரிவித்து, 2026-27 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறும், தொடக்கப் பள்ளிகள், பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டங்கள் மற்றும் பெற்றோர் வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலமாக இந்த திட்டம் தொடர்பான தகவல்களை பெற்றோருக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.