வேட்பாளர்கள், அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையொட்டி, போட்டியிடும் வேட்பாளர்கள், அரசு அலுவலர்களுக்கு சில கட்டுப்பாடுகளை
* வேட்பாளர்களுக்கு தனி வங்கிக் கணக்கு.
* நன்கொடை வரம்பு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே.
* பணப் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையொட்டி, போட்டியிடும் வேட்பாளர்கள், அரசு அலுவலர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெள்ளிக்கிழமை கூறியதாவது: மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் நிறைந்த சில தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு முன்கூட்டியே மத்தியப் படைகளை நிறுத்துதல், பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளுதல், வாக்காளர்களிடையே வாக்குரிமை ஜனநாயகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதிக பணப்புழக்கம் இருப்பதாகக் கருதப்படும் தொகுதிகள், வாக்குச்சாவடிகளில் மத்தியப் படைகளை நிறுத்துவது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த வேண்டும். மத்திய, மாநிலக் காவல் படைகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளை தினமும் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து அதன் அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சிறைத் தண்டனை: குறிப்பிட்ட சமுதாயத்தினரை வாக்களிக்க விடாமல் தடுப்பது அல்லது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின சமுதாயத்தினரை கட்டாயப்படுத்தி குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக வாக்களிக்க தூண்டினாலோ சம்பந்தப்பட்டவர்களுக்கு குறைந்தது ஆறு மாதமும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளும் சிறைத் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வாக்குச்சாவடியில் உள்ள தொகுதியில் தனது உறவினரோ, குடும்பத்தாரோ போட்டியிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்த பிறகுதான் அவர்களுக்கான பணி ஒதுக்கப்படும். அனைத்து வாக்குப்பதிவு நடைமுறைகளும் விடியோவில் பதிவு செய்யப்படும்.
தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களைக் கவரும் வகையில் மதுபானம் வழங்குதல், மது விநியோகம் போன்றவற்றை மாநிலக் கலால் துறையினர் உதவியுடன் காவல் துறையினர் தடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்தல் போன்றவற்றை தடுக்க வருமான வரித் துறையினர் அடங்கிய சிறப்புப் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களுக்கு கெடுபிடி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கான தேர்தல் செவினத்தை மேற்கொள்ள வசதியாக தனி வங்கிக் கணக்கை தொடங்குவது கட்டாயமாகும். அந்தக் கணக்கு மூலமே அவர் தனது தேர்தல் செலவின பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். விமான நிலையங்கள் மூலம் பெருமளவில் பணம் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில், விமான நிலையங்களில் வருமான வரிப் புலனாய்வுப் பிரிவினரை நியமிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நியாயமான காரணங்களுடன் கொண்டு வரப்படும் அதிக அளவு பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினால், அது பற்றி மாவட்டந்தோறும் நியமிக்கப்படும் முறையீட்டு அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். உரிய ஆதாரங்களைக் காட்டினால் அந்தப் பணம் உடனடியாக திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும். ரொக்கமாக ரூ. 20 ஆயிரம் வரையில் மட்டுமே ஒரு வேட்பாளர் நன்கொடை வாங்க முடியும். அதற்கு அதிகமான தொகைக்கு காசோலை அல்லது வங்கி வரைவோலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேர்தல் கணக்கு: தேர்தல் பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கான செலவும் அவரது செலவினமாகவே கருதப்படும். வேட்பாளருக்கான தேர்தல் செலவுக் கணக்கு விவரத்தை அவர் சார்ந்த கட்சிகள், தேர்தல் முடிவு வெளியான 30 நாள்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பணம் கொடுத்து செய்தி வெளியிடும் வழக்கத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்தும். தேர்தல் கண்காணிப்புக்காக பொதுத் தேர்தல் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் என மாவட்டத்துக்கு மூவர் நியமிக்கப்படுவர்.
இவர்கள் நீங்கலாக பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், தொகுதிகளைக் கண்காணிக்க சிறப்புப் பார்வையாளர்கள், விழிப்புணர்வு பார்வையாளர்கள் ஆகியோரும் போதிய அளவில் நியமிக்கப்படுவர் என்றார் நஜீம் ஜைதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.