FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்து மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் நவீன் பட்நாயக்: காங்கிரஸ்

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளித்து மக்களுக்கு ஒடிஸô முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன்

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளித்து மக்களுக்கு ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் துரோகம் இழைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சுட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில தலைவர் நிரஞ்சன் பட்நாயக் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவளித்தது யாருக்கும் ஆச்சரியத்தை தரவில்லை. பிஜு ஜனதா தளம் கட்சியின் முறைகேடுகளை சிபிஐ வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, பாஜக கூட்டணி வேட்பாளருக்கு அக்கட்சி ஆதரவளித்துள்ளது.
ஒடிஸாவில் வரும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில், இந்நடவடிக்கை இருக்கிறது. ஒடிஸா மக்களிடம் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக ஆகிய 2 கட்சிகளையும் சமதூரத்தில் வைத்திருப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்து வந்தது. அப்போதெல்லாம் நவீன் பட்நாயக் பேசும்போது, ஒடிஸா வின் நலன்களை காங்கிரஸும், பாஜகவும் புறக்கணித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் மறுபக்கமோ, நவீன் பட்நாயக் மிகவும் புத்திசாலித்தனமாக பணமதிப்பிழப்பு விவகாரம், ஜிஎஸ்டி வரி அமல், குடியரசுத் தலைவர் தேர்தல், ஒரே நேரத்தில் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவளித்தார்.
அதேபோல், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷுக்கு ஆதரவு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் விசுவாசமானவர் என்பதையும் நவீன் பட்நாயக் நிரூபித்து விட்டார். இதன்மூலம் மக்களுக்கு நவீன் பட்நாயக் துரோகம் இழைத்து விட்டார். பச்சோந்தி போல தமது நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டு, மாநிலத்தின் நலன்களை நவீன் பட்நாயக் புறக்கணித்து விட்டார் என்று அந்தப் பதிவுகளில் நிரஞ்சன் பட்நாயக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments