கமலா மில்ஸ் தீ விபத்து வழக்கில் செப். 10-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள கமலா மில்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று விசாரணைக் குழுவுக்கு மும்பை
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள கமலா மில்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று விசாரணைக் குழுவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கமலா மில்ஸ் வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி இரவு ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக விசாரணைக்காக 3 பேர் கொண்ட குழுவை அமைக்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதையடுத்து, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ.வி.சாவந்த் உள்பட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
முன்னதாக, விசாரணை அறிக்கையை வியாழக்கிழமைக்குள் (ஆக.30) சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு பிருஹன்மும்பை மாநகராட்சி சார்பில் நீதிபதி பி.ஆர்.கவாய், எம்.எஸ்.கார்னிக் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாநகராட்சி வழக்குரைஞர் அனில் சகாரே கூறுகையில், "விசாரணைகள் முடிவடைந்துவிட்டன. அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்றத்தில் அதை சமர்ப்பிக்க செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விசாரணைக் குழு கால அவகாசம் கோரியிருக்கிறது. எனவே, அதுவரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்தார்.
அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு காலக்கெடுவை நீதிபதிகள் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.