காப்பீடு இல்லாத வாகனங்கள் விற்பனை: விதிகளை வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, விபத்தை ஏற்படுத்திய காப்பீடு செய்யப்படாத வாகனங்களை விற்பனை செய்வது தொடர்பான விதிகளை வகுக்குமாறு அனைத்து
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, விபத்தை ஏற்படுத்திய காப்பீடு செய்யப்படாத வாகனங்களை விற்பனை செய்வது தொடர்பான விதிகளை வகுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய விதிகளின்படி, காப்பீடு செய்யப்படாத வாகனங்கள் விபத்தில் சிக்கினால், அவற்றை விற்பனை செய்வது முடியாது. இதனால், விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
காப்பீடு செய்யப்படாத வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது, அந்த வாகனங்களை மாஜிஸ்திரேட் கைப்பற்றி விற்பனை செய்து, அந்தத் தொகையை மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் செலுத்தப்பட வேண்டும். அந்தத் தொகை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக, தில்லியில் ஏற்கெனவே விதிமுறைகள் அமலில் உள்ளன. இதேபோல், மற்ற மாநிலங்களும் 12 வாரங்களில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், பிகார், பஞ்சாப், ஜார்க்கண்ட், புதுச்சேரி, லட்சத் தீவுகள் ஆகிய 7 மாநில அரசுகள், புதிய விதிமுறைகளை வகுக்கும் பணிகளைத் தொடங்கி விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தன.
தில்லி அரசு ஏற்கெனவே அந்த விதிமுறைகளை வகுத்துவிட்டதாகத் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான விதிமுறைகளில் மத்தியப் பிரதேச மாநில அரசு சில ஆட்சேபங்களை தெரிவித்தது.
முன்னதாக, விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்குவதில் மாநில அரசை ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி, உஷா தேவி என்பவர் தாக்கல் செய்த மனுவை பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.