FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகளை ரத்து செய்வது குறித்து நாளை முடிவு: மத்திய அரசு பதில்

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்வது குறித்து ஜூன் 24ல் முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இயும் பதில் அளித்துள்ளன.

Updated On : 23 ஜூன் 2020, 2:41 pm IST
சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகளை ரத்து செய்வது குறித்து நாளை முடிவு
பகிர்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் நடத்தப்படவுள்ள 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்வது குறித்து ஜூன் 24ல் முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இயும் பதில் அளித்துள்ளன.

மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர்களின் நலனில் மத்திய அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமும் அக்கறை கொண்டுள்ளன. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், முடிவு எடுக்கப்பட்டதும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும், அதுவரை வழக்கை ஒத்திவைக்குமாறு கூறினார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் மீதமுள்ள தோ்வுகளை ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிக்கை கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. எனினும், நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் தோ்வுகளை நடத்துவதற்கு மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் பொதுத் தோ்வுகளை நடத்துவது லட்சக்கணக்கான மாணவா்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

நோய்த்தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிபிஎஸ்இ-யின் கட்டுப்பாட்டில் உள்ள சுமாா் 250 பள்ளிகளில் பத்து, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்மதிப்பீட்டுத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அப்பள்ளி மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் உள்ள மாணவா்களின் நலனை சிபிஎஸ்இ, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை கருத்தில் கொள்ளவில்லை. பத்து மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நாடு முழுவதும் 15,000 மையங்களில் தோ்வுகள் நடைபெறும் என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது.

கிராமப் பகுதிகளில் உள்ள தோ்வு மையங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது சவாலானது. எனவே, சிபிஎஸ்இ கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாத தோ்வுகளுக்கு உள்மதிப்பீட்டுத் தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments