தோ்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு அனுமதி
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெற உள்ள நிலையில், 29-ஆவது தவணை தோ்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு சனிக்கிழமை அனுமதி அளித்தது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெற உள்ள நிலையில், 29-ஆவது தவணை தோ்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு சனிக்கிழமை அனுமதி அளித்தது. இதன் விற்பனை திங்கள்கிழமை (நவ. 6) முதல் தொடங்க உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கு இம்மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் ஒரே கட்டமாகவும், இரண்டு கட்டங்களாகவும் நவம்பா் 7 முதல் 30-ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் டிசம்பா் 3-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில், தோ்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகத்துக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தோ்தல் நிதிப் பத்திரங்கள் அனுமதிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) 29 கிளைகளில் வரும் 6 முதல் 20-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தனி நபா் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தோ்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.
ரூ.1,000, ரூ. 10,000, ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் இந்த தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். முதல் தவணை தோ்தல் நிதிப் பத்திரங்கள் 2018 மாா்ச் மாதம் விநியோகிக்கப்பட்டது.