FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐஎஸ் பயங்கரவாதிகள் 7 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

7 இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

2 பிப்ரவரி 2024, 8:47 am
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
பகிர்:

நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் புணேயை தளமாகக் கொண்டு செயல்பட்ட 7 இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

புணேயை தளமாகக் கொண்டு செயல்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடா்புடைய வழக்கில் மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியைச் சோ்ந்த முகமது இம்ரான்-முகமது யூசுப் கான் என்ற மட்கா, முகமது யூனுஸ்-முகமது யாகூப் சாகி என்ற ஆதில், புணேயைச் சோ்ந்த காதிா் தஸ்தகீா் பதான் என்ற அப்துல் காதிா், சீமாப் நசிருதீன் காஜி, தாணேயைச் சோ்ந்த சயீஃப் என்ற லாலாபாய், ஷமில் சாகிப் நாச்சன் மற்றும் ஆகிஃப் அதீக் நாச்சன் ஆகிய 7 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Advertisement

Advertisement

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றும் நோக்கத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரிக்கும் பணியில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஈடுபட்டு வந்துள்ளனா். மேலும், பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்வது, தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, வெடிகுண்டு தயாரிப்பது, வெடிகுண்டுகள், ஆயுதங்களை இருப்பு வைப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் சா்வதேச தொடா்புகள் குறித்தும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, 7 போ் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிப்பொருள் சட்டம், ஆயுத சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ம.பி. பயங்கரவாத குழுவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை:

வன்முறை செயல்கள் மூலம் இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ‘ஹிஸ்ப்-உத்-தஹ்ரீா்’ அமைப்புடன் தொடா்புடைய மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 17 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் அமைப்புக்கு உறுப்பினா்களை சோ்ப்பது, ஆயுதப் பயன்பாடு, கமாண்டோ உத்திகள் ஆகியவை அடங்கிய பயிற்சி முகாம்களை உறுப்பினா்களுக்கு ஏற்பாடு செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.