உ.பி. வெற்றி: காங்கிரஸ் - சமாஜவாதியின் ஒற்றுமைக்கு கிடைத்த பலன்!
நீங்கள் எங்களிடம் காட்டிய அன்புக்கும், விசுவாசத்துக்கும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்றென்றும் உங்களுக்காக நாங்கள் அனைவரும் உழைக்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த வெற்றி காங்கிரஸ் - சமாஜவாதி கட்சிகள் இடையேயான ஒற்றுமைக்கு கிடைத்த பலன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் (வெற்றிக்கு பிறகு) முதல்முறை அங்கு சென்றனர்.
அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய பிரியங்கா காந்தி, அமேதி, ரேபரேலி தொகுதியில் கிடைத்துள்ளது வரலாற்று வெற்றி. இந்தத் தொகுதி மக்கள் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாடுமே அர்ப்பணிப்பு உண்மை மற்றும் சுத்தமான அரசியலை எதிர்நோக்கியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகள் இடையேயான ஒற்றுமைக்கு கிடைத்த பலன் உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த வெற்றி.
எங்களுடன் தோளுக்கு தோளாக நின்று வெற்றிக்காக உழைத்த சமாஜவாதி நண்பர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அமேதி, ரேபரேலி வெற்றிக்காக நாம் உருவாக்கியது வலிமையான ராணுவம் போன்ற கட்டமைப்பு.
நீங்கள் எங்களிடம் காட்டிய அன்புக்கும், விசுவாசத்துக்கும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்றென்றும் உங்களுக்காக நாங்கள் அனைவரும் உழைக்கிறோம்.
இம்முறை தேர்தலுக்காக இங்கு வந்தபோது ராகுலிடம் நான் சொன்னேன், வாக்குப்பதிவுக்கு 300 மணிநேரம் இருக்கிறது என்றும், அதில் 2- 3 மணிநேரம் தூங்குவதற்கு எடுத்துக்கொண்டு, மற்ற நேரங்களில் கடினமாக உழைக்கவும் அறிவுறுத்தினேன்.
அமேதி தொகுதியில் போட்டியிட்டதால், முதல்முறையாக தேர்தல் மேலாண்மையில் கிஷோரி லால் இடம்பெறவில்லை. அவர் இல்லாதது, நம் உழைப்பின் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது எனப் பேசினார்.