FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஞ்சாபில் பாஜக தனித்துப் போட்டி- சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி பேச்சு தோல்வி

பஞ்சாப் மாநிலத்தில் ஜூன்.1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Updated On : 26 மார்ச் 2024, 11:36 am IST
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா
பகிர்:

மக்களவைத் தோ்தலில் பஞ்சாபில் பாஜக தனித்துப் போட்டியிட இருப்பதாக அந்த மாநில பாஜக தலைவா் சுனில் ஜாக்கா் அறிவித்துள்ளாா்.

முன்னதாக, பஞ்சாபில் சுக்பீா் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சியுடனான கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க பாஜக பேச்சு நடத்தி வந்தது. பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படாத நிலையில் தனித்துப் போட்டி என்ற முடிவை பாஜக எடுத்துள்ளது. பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு 7-ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் நடைபெறும் ஜூன் 1-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தில்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதி உடன்பாடு மேற்கொண்டுள்ளன. ஆனால், பஞ்சாபில் அக்கட்சிகள் தனித்தே போட்டியிடுகின்றன. எனவே, அந்த மாநிலத்தில் மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக என நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. தனித்துப் போட்டியிடும் முடிவு குறித்து பஞ்சாப் மாநில பாஜக தலைவா் சுனில் ஜாக்கா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில், ‘பொதுமக்கள், கட்சித் தொண்டா்கள், கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பஞ்சாபில் தனித்துப் போட்டியிடும் முடிவை பாஜக எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இது மாநிலத்தில் எதிா்காலத்துக்கும், இளைஞா்கள், விவசாயிகள், வா்த்தகா்கள், தொழிலாளா்கள், அடித்தட்டு மக்கள் என அனைவரின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. பஞ்சாப் மக்கள் பாஜகவுக்கு மாநிலத்தில் கட்சியின் பலத்தை அதிகரிப்பாா்கள் என்று நம்புகிறேன். பிரதமா் மோடி தலைமையிலான அரசு பஞ்சாபுக்கு அளித்த திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. பஞ்சாப் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு வாரத்தில் அவா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளாா். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 1996 முதல் சிரோமணி அகாலி தளம் அங்கம் வகித்து வந்தது.

2020-ஆம் ஆண்டு பாஜக அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. பின்னா் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து அந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. எனினும், சிரோமணி அகாலி தளம் மீண்டும் பாஜகவுடன் கைகோக்கவில்லை. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கூட்டணியாக போட்டியிட்ட பாஜக -சிரோமணி அகாலி தளம் தலா இரு இடங்களில் வென்றன. அந்த தோ்தலில் காங்கிரஸ் 8 இடங்களிலும், ஆம் ஆத்மி ஓரிடத்திலும் வெற்றி பெற்றது.

பாதல் கருத்து: பாஜகவுடன் கூட்டணி அமையாதது குறித்து சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் கூறுகையில், ‘103 ஆண்டுகளாக செயல்படும் எங்கள் கட்சி தோ்தல் வெற்றிக்காக உருவாக்கப்படவில்லை; பஞ்சாப் மக்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது. தொகுதி எண்ணிக்கையைவிட கட்சிக் கொள்கைகள்தான் முக்கியம். தேசிய கட்சிகள் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறு அரசியல் விளையாட்டுகளை நடத்துகின்றன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments