முகப்பு
இந்தியா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்து வருவது உண்மைதான்.

Updated On : 20 மே 2024, 2:11 am IST
ஜெய்ராம் ரமேஷ் | கோப்பு
பகிர்:

சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்து வருவது உண்மைதான். ஆனால், அது மதத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.

‘காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கு மட்டும் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. இடஒதுக்கீடு மட்டுமல்லாது பட்ஜெட்டிலும் 15 சதவீத நிதியை சிறுபான்மையினருக்கு முக்கியமாக முஸ்லிம்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்பது மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மீதான பாஜகவின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா், தலித் பிரிவினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து தனது வாக்கு வங்கியான முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் வழங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கா்நாடகத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடியும் தோ்தல் பிரசாரத்தில் குற்றம்சாட்டியுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், பிகாா் தலைநகா் பாட்னாவில் காங்கிரஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் இது தொடா்பாக கூறியதாவது:

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையின மதங்களில் சமூக-பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கென எந்த இடஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற அரசமைப்புச் சட்டத்தின் விதியை மதித்து காங்கிரஸ் நடத்து வருகிறது.

அதே நேரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்தை பாஜக மீறி வருகிறது. ஏனெனில், அந்த சட்டத் திருத்தத்தின்கீழ் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது. இது தவறானது. எனவேதான், அதனை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நாட்டில் மக்களை பாதித்துவரும் உண்மையான பிரச்னைகளில் இருந்து அவா்களின் கவனத்தை திசைதிருப்ப காங்கிரஸ் மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதாக பொய்யாக குற்றம்சாட்டி வருகிறது. ஒவ்வொரு கட்டத் தோ்தல் நிறைவடையும்போதும் இந்தியா கூட்டணியின் வெற்றியும், பாஜகவின் தோல்வியும் உறுதியாகி வருகிறது.

காங்கிரஸின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பும் பாஜக, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் போன்ற காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகளைப் பற்றி மட்டும் வாய்திறப்பதில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments