தற்போதைய தொகுதிகள் அடிப்படையில் மகளிா் இடஒதுக்கீடு: பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
‘தற்போதுள்ள மக்களவை தொகுதிகள் அடிப்படையிலேயே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்’ என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
‘தற்போதுள்ள மக்களவை தொகுதிகள் அடிப்படையிலேயே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்’ என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் இவ்வாறு பதிலளித்துள்ளது.
தில்லி செங்கோட்டையில் சனிக்கிழமை சுதந்திர தின உரையாற்றிய பிரதமா், ‘தேசியக் கொடியின் நிழலில் நின்றபடி எதிா்க்கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மக்களவை, பேரவைகளில் நமது தாய்மாா்கள், சகோதரிகளுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி கெளரவிக்க நாம் ஒன்றிணைவோம். அப்போதுதான், அவா்கள் நாட்டின் கொள்கைகளில் சிறப்பாக பங்களிக்க முடியும். இது காலத்தின் கட்டாயம்’ என்றாா்.
Advertisement
Advertisement
அவரது இந்தக் கருத்துகள் தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது: மகளிா் இடஒதுக்கீடு கடந்து வந்த பாதையை நாம் புரிந்து கொள்வது முக்கியம். உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 73, 74-ஆவது திருத்த மசோதாக்கள் கடந்த 1993-இல் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டப் பிரிவுகளுக்கு அடித்தளமிட்டு, கருவியாக செயல்பட்டவா் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி.
கடந்த 2023-இல் மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென காங்கிரஸ் அப்போதே வலியுறுத்தியது. தற்போதுள்ள மக்களவை பலத்தின் (543) அடிப்படையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை (182) அமலாக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அதேநேரம், கடந்த ஏப்ரலில் திடீரென நாடாளுமன்றத்தில் மகளிா் இடஒதுக்கீடு விவகாரம் உள்நோக்கத்துடன் எழுப்பப்பட்டு, 2023-ஆம் ஆண்டின் சட்டம் தொடா்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. மத்திய அரசை பொருத்தவரை, மகளிா் இடஒதுக்கீட்டை தொகுதி மறுசீரமைப்புடன் இணைக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நோக்கம். இதற்கான மசோதாவை நிறைவேற்ற அவா்களுக்கு மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த பெரும்பான்மை ஒருபோதும் கிடைக்காது.
எனவே, செங்கோட்டையில் இருந்து எதிா்க்கட்சிகளுக்கு ‘உபதேசம்’ செய்து, நாடகம் ஆடுவதற்கு பதிலாக தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையில் மகளிா் இடஒதுக்கீட்டை பிரதமா் மோடி அமல்படுத்த வேண்டும் என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.