முகப்பு
இந்தியா

தனியார் நிறுவனங்களை வீழ்த்தி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற பிஎஸ்என்எல்

தனியார் நிறுவனங்களை வீழ்த்தி 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற பிஎஸ்என்எல்

Updated On : 22 நவம்பர் 2024, 3:35 pm IST
பிஎஸ்என்எல்
பகிர்:

புது தில்லி: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியபோது, அரசுப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், கட்டணக் குறைப்பை அறிவித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதிதாக 8 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக புதிதாக வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது. இதன் மூலம் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 கோடியே 18 லட்சமாக உயர்ந்துள்ளது. பங்குச் சந்தையிலும் இதன் மதிப்பு 7.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்த பிஎஸ்என்எல் நிறுவனம், ஜூலை மாதத்தில் 29 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது.

Advertisement

அதேவேளையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடவோன் ஐடியா நிறுவனங்கள், கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வை அறிவித்ததிலிருந்து வாடிக்கையாளர்களை இழந்துகொண்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வை அறிவித்தன. ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்த கட்டண உயர்வானது 25 சதவீத அளவுக்கு இருந்தது, சாதாரண மக்களை மிகவும் பாதித்திருந்தது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் சேர்த்து ஒரு கோடி வாடிக்கையாளர்கள் வெளியேறியிருக்கிறார்கள். இதில் ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டும் 79 லட்சம் பேர். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 14 லட்சம் பேர், வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 15 லட்சம் பேர்.

அதுபோல, ஜியோ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 40 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களும் வெளியேறியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும், எண்ணை மாற்றாமல், தொலைத் தொடர்பு நிறுவனத்தை மட்டும் மாற்றுவதற்கான கோரிக்கைகள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திலிருந்துதான் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதற்கடுத்த இடத்தில மகாராஷ்டிரமும் மத்தியப்பிரதேசமும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.