FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

வைப்புச் சான்றிதழ்வெளியீடுகள் மூலம் வங்கிகள் ரூ.1.80 லட்சம் கோடி திரட்டல்

வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான பணப்புழக்கம், கடன்களுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, வங்கிகள் கடந்த ஜூன் மாதத்தில் வைப்புச் சான்றிதழ்களின் வெளியீட்டுமூலம் ரூ.1.80 லட்சம் கோடியைத் திரட்டியுள்ளது.

பகிர்:

வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான பணப்புழக்கம், கடன்களுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, வங்கிகள் கடந்த ஜூன் மாதத்தில் வைப்புச் சான்றிதழ்களின் வெளியீட்டுமூலம் ரூ.1.80 லட்சம் கோடியைத் திரட்டியுள்ளது.

இந்தியக் கடன் அனுமதிக் கழகத்தின் (சிசிஐஎல்) தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜூனில் வங்கிகள் திரட்டிய ரூ.1.31 லட்சம் கோடியிலிருந்து இது 38 சதவீத அதிகரிப்பாகும். அதேபோல், கடந்த மே மாதத்தில் திரட்டப்பட்ட ரூ.1.12 லட்சம் கோடியிலிருந்து 61.79 சதவீதம் கூடுதலாகும்.

ஜூன் மாத நிதித் திரட்டலில் நாட்டின் முன்னணி பொதுத் துறை மற்றும் தனியாா் துறையைச் சாா்ந்த 5 வங்கிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. எச்டிஎஃப்சி வங்கி அதிகபட்சமாக ரூ.26,285 கோடியைத் திரட்டி முதலிடத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பரோடா வங்கி(ரூ.24,125 கோடி), இந்திய யூனியன் வங்கி(ரூ.21,175 கோடி), கனரா வங்கி(ரூ.17,000 கோடி), ஆக்சிஸ் வங்கி(ரூ.16,360 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த 5 வங்கிகள் மட்டும் இணைந்து மொத்தம் ரூ.1.05 லட்சம் கோடியைத் திரட்டியுள்ளன. இது ஜூன் மாதத்தின் மொத்த நிதித் திரட்டலில் 58.25 சதவீதமாகும்.

வங்கிகளின் கடன் வளா்ச்சி இரட்டை இலக்கத்தில் நீடித்து வரும் சூழலில், அதற்கு இணையாக சில்லறை வைப்புத்தொகை வரவு இல்லாததே இந்நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், முதல் காலாண்டு முடிவடைந்த நிலையில், முன்கூட்டிய வரி செலுத்துதல் மற்றும் ஜிஎஸ்டி செலுத்துகைக்கான நிதி வெளியேற்றம் காரணமாக வங்கிகளில் தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், பணப்புழக்க வரம்பு விகிதம் (எல்சிஆா்) போன்ற ஒழுங்குமுறை விதிமுறைகளைப் பூா்த்தி செய்வதற்காக வங்கிகள் வைப்புச் சான்றிதழ்கள் மூலம் விரைவாக நிதியைத் திரட்டியுள்ளன.

ஜூன் மாதத்தின் முதல் 3 வாரங்களில் வங்கி அமைப்பில் பணப்புழக்கம் உபரியாக இருந்தபோதிலும், ஜூன் 21-க்குப் பிறகு அது பற்றாக்குறையாக மாறியது. இத்தற்காலிக நிதி நெருக்கடியைச் சமாளிக்க, 13 மாறுபடும் வட்டி விகித ரெப்போ (விஆா்ஆா்) ஏலங்களை ரிசா்வ் வங்கி நடத்தியது. இதன்மூலம், வங்கி அமைப்பில் ஒட்டுமொத்தமாக ரூ.5,97,900 கோடி செலுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments