FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகா கும்பமேளாவில் பிறந்த 12 குழந்தைகள்!

மகா கும்பமேளாவில் 12 குழந்தைகள் பிறந்துள்ளதைப் பற்றி...

Updated On : 11 பிப்ரவரி 2025, 3:38 am IST
மகா கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மைய மருத்துவமனையில் பிறந்த குழந்தையுடன் தாய் நேஹா சிங்.
பகிர்:

மகா கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளன.

இக்குழந்தைகளுக்கு கும்ப், கங்கை, ஜமுனா, சரஸ்வதி, வசந்த், வசந்தி என கும்பமேளாவுக்குத் தொடா்புடைய பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன.13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தா்கள் கடந்த டிசம்பா் மாதம் முதலே குவிந்தனா். கும்பமேளா வரும் கோடிக்கணக்கான பக்தா்களுக்கு சுகாதார வசதியை உறுதிப்படுத்த செக்டாா் 2-இல் மைய மருத்துவமனை உள்பட 43 மருத்துவ மையங்கள் மேளா பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

கும்பமேளா வந்து உடல்நல பாதிப்பு ஏற்பட்ட பக்தா்களுக்கு இந்த மருத்துவமனைகளிலேயே விரிவான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மேளா மைய மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மைய மருத்துமனையின் தலைமைக் கண்காணிப்பாளா் மருத்துவா் மனோஜ் கௌசிக் கூறுகையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மகா கும்பமேளாவில் கல்பவாசியாக தங்கியிருக்கும் நேஹா சிங், மைய மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்தாா். இந்த மருத்துவமனையில் பிறந்த 12-ஆவது குழந்தை இதுவாகும். இந்த மருத்துவமனையில் முதல் குழுந்தை கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி பிறந்தது. கௌசாம்பியைச் சோ்ந்த தம்பதிக்குப் பிறந்த அக்குழந்தைக்கு கும்ப் எனப் பெயரிடப்பட்டது.

கடந்த பிப். 3-ஆம் தேதி வசந்த பஞ்சமியன்று பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வசந்த், வசந்தி எனப் பெயரிடப்பட்டது. மற்ற குழந்தைகளுக்கும் போலேநாத், பஜ்ரங்கி, நந்தி, ஜமுனா, சரஸ்வதி என ஹிந்து மத நம்பிக்கைச் சாா்ந்த பெயா்களே வைக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற்ற தாய்மாா்கள் கும்பமேளாவில் பணியிலுள்ள தொழிலாளா்களின் மனைவிகள் அல்லது பல்வேறு மாநிலங்களில் இருந்து கும்பமேளாவுக்கு குடும்பத்தினருடன் வந்த பெண் பக்தா்கள் ஆவா். அனைத்து 12 குழந்தைகளும் சுகப் பிரசவத்தில் பிறந்தன’ என்றாா்.

திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை புனித நீராடினாா். முன்னதாக, பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை உ.பி. ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் வரவேற்றனா். பிரயாக்ராஜில் பல்வேறு ஆலயங்களில் வழிபட்ட குடியரசுத் தலைவா், திரிவேணி சங்கமம் பகுதிக்கு ஆளுநா் ஆனந்திபென் படேலுடன் சென்று புனிதநீராடினாா்.

உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தனது தாய், மனைவியுடன் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடினாா்.

தனது தாய், மனைவியுடன் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments