நகைக் கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! ரிசர்வ் வங்கியின் புதிய விதி!!
ரிசர்வ் வங்கியின் புதிய விதியால், நகைக் கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
நகைக் கடன் வாங்கியவர்கள், அதற்கான அவகாசம் முடிந்ததும் அதனை வட்டி மட்டும் கட்டி மறு அடமானம் வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டது.
பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன். ஏழை, எளிய மக்களுக்கு இந்த தனிநபர் கடன் எல்லாம் கிடைக்காது என்பதால், அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு எல்லாம் கைகொடுப்பது இந்த நகைக்கடன்தான்.
அந்த நகைக் கடனிலும் ரிசர்வ் வங்கி தலையை நுழைத்து தற்போது புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது பத்தாயிரம் முதல் லட்சக் கணக்கில் நகைக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு பேரதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
Advertisement
வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள், அவகாசம் முடிந்ததும், மொத்த பணத்தையும் கொடுத்து நகையை மீட்டு, மீண்டும் புதியது போலத்தான் அடகு வைக்க முடியம். அதுவும் அடுத்த நாள்தான் அவ்வாறு அடகு வைக்க முடியும் என்பதால், இது ஏழை எளிய மக்களுக்கு பெருந்துயரமாக மாறியிருக்கிறது. முதலில், பணத் தேவைக்காகத்தான் நகையை வங்கியில் அடமானம் வைத்திருக்கிறார்கள். எனவே, பணம் இருந்தால் உடனடியாக வங்கியில் செலுத்திவிடுவார்கள். ஆனால், இல்லாத பணத்தை வெளியில் வட்டிக்கு வாங்கியாவது நகையை மீட்க வேண்டிய நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதுவரை, வட்டி மட்டும் கட்டி வந்து, கால அவகாசம் ஓராண்டு அல்லது ஆறு மாதத்தில் நிறைவு பெற்றதும், ஒரே நாளில் அதனை மறு அடமானம் வைத்து விடலாம். இதனால், நகைக் கடன் வாங்கியவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நகை, ஏலத்துக்குப் போகாது. எப்போது பணம் வருகிறதோ அப்போது மீட்கலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தார்கள்.
இதற்கெல்லாம் ரிசர்வ் வங்கி கொள்ளும் விளக்கம் என்னவென்றால், கடன் வழங்குவதில் உள்ள வெளிப்படைத் தன்மையையும் பிரச்னைகளையும் களைவதற்காகவே இந்த விதிமுறை உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது.
ஆனால், ஏற்கனவே, ஒரு சவரனுக்கு வங்கிகள் கொடுக்கும் பணம் குறைவு, வங்கிகளில் அதிக நேரம் ஆகும் என ஏழை மக்கள் அடகுக் கடைகளை நாடி வந்த நிலையில், இதுபோன்ற விதிமுறைகளால், வங்கிகளில் நகைக் கடன் வைப்பவர்களின் எண்ணிக்கை சரிந்து, பணத்தை கடன் வாங்குவதும், வைத்த நகையை மீட்க முடியாமல், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும்தான் நடக்கப் போகிறது என்று ஆதங்கப்படுகிறார்கள் ஏழை மக்கள்.
எனவே, எப்போதுமே தொழிலதிபர்களுக்காகவே சிந்திக்காமல், ரிசர்வ் வங்கி கொஞ்சம் மனம் இறங்கி, ஏழை மக்களைப் பற்றியும் கருத்தில் கொண்டு இந்த விதிமுறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.