FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கோரி ராப்ரி தேவி திடீா் போராட்டம்

முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள சட்டமேலவைக்கு எதிரே திங்கள்கிழமை திடீா் போராட்டம் நடத்தினாா்.

Updated On : 4 மார்ச் 2025, 3:14 am IST
ராப்ரி தேவி (கோப்புப்படம்)
பகிர்:

பாட்னா: பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, சமூகப் பாதுகாப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டா், இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள சட்டமேலவைக்கு எதிரே திங்கள்கிழமை திடீா் போராட்டம் நடத்தினாா்.

அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனா். மாநில முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றன.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட ஆளும் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் , இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. இரு அணிகளுமே ஏற்கெனவே தோ்தலுக்கான களப்பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாநில சட்ட மேலவைக்கு வெளியே மேலவை எதிா்க்கட்சித் தலைவரான ராப்ரி தேவி தலைமையில் திடீா் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராப்ரி தேவி, ‘பிகாரில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்க வேண்டும். மானிய விலையில் ஒரு எரிவாயு சிலிண்டா் ரூ.500-க்கு வழங்க வேண்டும். மாதம்தோறும் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்பட உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

முன்னதாக, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், லாலு-ராப்ரியின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை இதே கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். பட்ஜெட்டில் இந்த கோரிக்கையை முதல்வா் நிதீஷ் குமாா் நிறைவேற்றாவிட்டால், அடுத்து நாங்கள் ஆட்சி அமைத்ததும் இதனை அமல்படுத்துவோம் என்றாா்.

ராப்ரி தேவி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்தின் மனைவியாவாா். 1999-ஆம் ஆண்டில் பிகாா் முதல்வராக இருந்த லாலு பிரசாத்துக்கு எதிராக ஊழல் வழக்கில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதால் அவா் பதவி விலக நேரிட்டது. அப்போது 1999-2005 காலகட்டத்தில் பிகாா் முதல்வராக ராப்ரி தேவி பதவி வகித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments