முகப்பு
இந்தியா

நினைவிருக்கிறதா தெலங்கானா ஆணவப்படுகொலை? குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் பிரணாய் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை

Updated On : 11 மார்ச், 2025 at 11:13 AM
பிரணாய் - அம்ருதா - Center-Center-Hyderabad
பகிர்:

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடாவைச் சேர்ந்த பிரணாய் குமார், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டாவது குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்ருதா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பிரணாய், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் தந்தை மாருதிராவ், ஆணவப்படுகொலை செய்ய முடிவெடுத்தார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணமாகி, அம்ருதா தாய்மயடைந்திருந்த நிலையில், செப்டம்பர் மாதம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த போது, கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் பிரணாயை வெட்டிக்கொன்றனர். அப்போது இந்த படுகொலைக் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பலரும் தங்கள் பிள்ளையைப் போல பார்த்துப் பதறினர்.

இந்த வழக்கில், முதல் குற்றவாளி தொழிலதிபர் மாருதி ராவ் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

இரண்டாவது முக்கிய குற்றவாளி சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302ஆவது பிரிவின்படி, சுபாஷ் சர்மாவை சாகும்வரை தூக்கிலிட நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அம்ருதாவின் மாமா உள்பட ஆறு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூலிப்படைத் தலைவன் அக்சர் அலி உள்ளிட்டவர்களுக்கு, மாருதி ராவ், தனது மகள் அம்ருதா காதல் திருமணம் செய்துகொண்டது பிடிக்காமல், பணம் கொடுத்து பிரணாயைக் கொலை செய்தது காவல்துறை விசாரணையில் முழுமையாக நிரூபிக்கப்பட்டது.

அம்ருதா கருவுற்று, மருத்துவப் பரிசோதனைக்கு, பிரணாயுடன் வந்திருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் மருத்துவமனை வாயிலுக்கு வந்த கூலிப்படையினர் பிரணாயை வெட்டிக்கொன்றனர். இது குறித்து எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1,600 பக்கத்திலான குற்றப்பத்திரிகை தாக்கல செய்யப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மாருதி ராவுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட அம்ருதாவின் மாமா ஷ்ரவன் குமாரின் உடல்நிலை மற்றும் திருமணமாகாமல் இருக்கும் இரண்டு மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குறைந்த தண்டனை வழங்குமாறு கோரப்பட்டது. மேலும், அம்ருதாவே, தனது தந்தை இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட காரணம் என்று, ஷ்ரவன் குமாரின் மகள் ஸ்பிருதி வாதிட்டார்.

தீர்ப்பைத் தொடர்ந்து, பிரணாயின் குடும்பத்தினர், அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், ஜாதி மதத்தைப் பெரிதாக நினைத்து பிள்ளைகளின் வாழ்வை நாசமாக்க வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

சம்பவம் கடந்து வந்தப் பாதை

ஜனவரி 30, 2018 - பிரணாய் - அம்ருதா திருமணம்

செப்டம்பர் 14 - பிரணாய் படுகொலை

2019 ஜூன் 12, 2019 குற்றப்பத்திரிகை தாக்கல்

மார்ச் 2020 மாருதி ராவ் தற்கொலை

மார்ச் 2025 ஆவணப்படுகொலையில் தீர்ப்பு

விசாரணையில்...

78 சாட்சிகளிடம் விசாரணை

2 எதிர் தரப்பு சாட்சிகள்

குற்றவாளிகளுக்கு எதிராக 293 ஆதாரங்கள்

குற்றவாளிகளுக்கு ஆதரவாக 15 ஆதாரங்கள்

32 தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பாதாள அறைகள்

ராஜேந்திர சோழன் காலத்தில்

பாதாள அறை

கோர்களின்போது சிலைகள் விலையுயர்ந்த பொருள்க ளமறைக்க பயன்பாட்டிருகக்லாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.