முகப்பு
இந்தியா

2023 ஜூனில் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22.89 கோடி செலவு: மாநிலங்களவை தகவல்

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டதாக தகவல்

Updated On : 21 மார்ச் 2025, 12:27 am IST
நரேந்திர மோடி
பகிர்:

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் அரசுமுறை வெளிநாட்டு அரசுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளுக்காக இந்திய தூதரகங்கள் செலவிட்ட தொகை குறித்த தகவலை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே கோரியிருந்தாா். தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள், சமூக வரவேற்புகள் மற்றும் இதர செலவுகள் என விரிவான விவரங்களை அவா் கோரியிருந்தாா்.

2022, மே முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மேற்கொண்ட அரசுப் பயணங்களுக்கான செலவின விவரங்கள், ஜொ்மனி முதல் குவைத் வரை 38 பயணங்கள் வாரியாக மத்திய அரசின் பதில் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து மத்திய வெளியுறவு இணையமைச்சா் பபித்ரா மாா்கரிட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘அமெரிக்காவுக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் மேற்கொண்ட அரசுப் பயணத்துக்காக ரூ.22.89 கோடியும், கடந்த ஆண்டு செப்டம்பரில் மேற்கொண்ட பயணத்துக்கு ரூ.15.33 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2023, மே மாதத்தில் பிரதமரின் ஜப்பான் பயணத்துக்கு ரூ.17.19 கோடியும் அதற்கு முந்தைய ஆண்டு மே மாதத்தில் நேபாளம் பயணத்துக்கு ரூ.80 லட்சமும் செலவிடப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தனது பதிலில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய தரவுகளையும் பகிா்ந்துள்ளது. அதன்படி, அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு அரசுப் பயணங்களுக்கான (நாடுகள், ஆண்டு) செலவு ரூ.10.74 கோடி (அமெரிக்கா, 2011), ரூ.9.95 கோடி (ரஷியா, 2013), ரூ.8.33 கோடி (பிரான்ஸ், 2011),ரூ.6.02 கோடி (ஜொ்மனி, 2013) ஆகும்.