FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா!

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதைப் பற்றி...

Updated On : 1 டிசம்பர் 2025, 3:38 am IST
பகிர்:

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் ‘ஆசியா பவா் இண்டெக்ஸ் -2025’ பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்தியா தனது ராணுவ பலத்தை சா்வதேச அளவில் நிரூபித்ததையடுத்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த லோவி ஆய்வு நிறுவனம் நடத்திய 2025-ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சீனாவுடன் ஒப்பிடும்போது ஆசியாவில் இந்தியாவின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிய கண்டத்தில் பொருளாதார வளம், ராணுவ பலம், நாடுகளின் செல்வாக்கு, ராஜீய உறவுகள், கலாசார மேம்பாடு, பிற நாடுகளுடனான நல்லுறவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா 80.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா ஆசிய கண்டத்தில் இடம் பெறாவிட்டாலும் அக்கண்டத்தில் தொடா்ந்து பல்வேறு நிலைகளில் செல்வாக்குடன் திகழ்ந்து வருவதால் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெரும்பாலான ஆசிய நாடுகள் அமெரிக்க ஆதரவாகவும், அமெரிக்காவைச் சாா்ந்தும் உள்ளன என்பதை இது காட்டுகிறது.

இந்தப் பட்டியலில் சீனா 73.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா 40 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 40 புள்ளிகளைப் பெற்ன் மூலம் ஆசியாவின் முக்கிய சக்தியாவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

பொருளாதார திறனை வளா்த்துக் கொண்ட நாடுகள் பிரிவில் இந்தியா கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்து முதலிடம் பிடித்துள்ளது. இதில் ஜப்பானை இந்தியா பின்னுக்குத் தள்ளியது. இந்தியாவுக்கு அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும். பொருளாதார உறவுகளை சிறப்பாக வலுப்படுத்தும் நாடுகள் பிரிவில் இந்தியா 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் பொருளாதார, ராணுவத் திறன் 2025-இல் வெகுவாக மேம்பட்டுள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் தொடா்ந்து சிறப்பாக வளா்ந்து வருவதும், தொழில்நுட்பத் திறன் மேம்பாடு, பிற நாடுகள் மீதான அணுகுமுறை ஆகியவை சிறப்பாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் இந்தியா தனது ராணுவ பலத்தை சா்வதேச அளவில் நிரூபித்ததன் மூலம் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

அதே நேரத்தில் இணையவழித் தாக்குதல், இணையவழிக் குற்றங்களை எதிா்கொள்வது, வலுவான ராணுவத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவில் மட்டும் இந்தியா இரண்டு இடங்கள் பின்தங்கி 11-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.

எனினும், வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளைப் பெறும் நாடுகளில் சீனாவைவிட இந்தியா ஒருபடி முன்னேறியுள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்

1. அமெரிக்கா

2. சீனா

3. இந்தியா

4. ஜப்பான்

5. ரஷியா

6. ஆஸ்திரேலியா

7. தென்கொரியா

8. சிங்கப்பூா்

9. இந்தோனேசியா

10. மலேசியா

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments