முகப்பு
உலகம்

பயங்கரவாதத்தை வேரறுக்க கூட்டு நடவடிக்கை: உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு

பயங்கரவாதத்தை வேரறுக்க கூட்டு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 6:50 am IST
ஐ.நா. பொது சபை
பகிர்:

பயங்கரவாதத்தை வேரறுக்க கூட்டு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபையில் பயங்கரவாதத்துக்கு எதிரான ஐ.நா.வின் உலகளாவிய நடவடிக்கை தொடா்பான கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரீஷ் பா்வதனேனி பேசியதாவது:

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பல ஆண்டுகளாக இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதத்தால் உயிரிழப்பு, குடும்பம் இழப்பு உள்ளிட்ட விலைகளை இந்திய மக்கள் கொடுத்து வருகிறாா்கள். இந்த அனுபவமே, பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் அணுகுமுறையை உருவாக்கியுள்ளது. பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அது பாரபட்சமின்றி கண்டிக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில், இரட்டை நிலைப்பாட்டை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோா், பயங்கரவாதத்தை ஒருங்கிணைப்போா், நிதியளிப்போரை அவா்களின் செயலுக்குப் பொறுப்புடையதாக்கி, நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமை உள்ளது. இதில் ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும்.

பயங்கரவாதிகள் எப்போதும் பயங்கரவாதிகள்தான். பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயலாமல், அந்த கொலைகார சித்தாந்தத்தை வேரறுக்க நமது நாடுகள் தோளோடு தோள் கொடுத்து செயல்பட வேண்டும். தவறான காரணங்கள் அல்லது அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை வீணாகிவிடக் கூடாது. பயங்கரவாதம் பரவுவதற்கான சூழலைக் கண்டுபிடித்து, அதை சரிசெய்ய வேண்டியது அவசியம். அதை நியாயப்படுத்த தெரிவிக்கப்படும் காரணத்தை பாா்த்து குழப்பமடையக் கூடாது.

மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சியை நாம் நிலை நிறுத்த வேண்டும். அதேபோல், உயிா் வாழ்வதற்கான உரிமையே மனிதனின் முதல் மனித உரிமை என்றும், அந்த மனித உரிமை மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதலே பயங்கரவாதம் என்றும் நாம் பிரகடனம் செய்ய வேண்டும். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு உலக நாடுகள் தங்களுக்கு கிடைக்கும் நிதி தொடா்பான புலனாய்வுத் தகவலை பகிா்ந்து கொள்ள வேண்டும். மனித இனத்துக்கு பயங்கரவாதத்தால் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதையும், உலக நாடுகள் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுத்தால்தான் அதை தோற்கடிக்க முடியும் என்பதையும் உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments