FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

கர்நாடக அரசியல் களத்தை தாக்க வந்த புயல், எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாமல் கரையைக் கடந்துள்ளதைப் பற்றி...

Updated On : 1 டிசம்பர் 2025, 3:00 am IST
சிவக்குமார் - மல்லிகார்ஜுன கார்கே - சித்தராமையா
பகிர்:

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

2006- ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைந்த காலத்திலும் சரி, 2013 முதல் 2018- ஆம் ஆண்டுவரை நடந்த சித்தராமையா ஆட்சிக் காலத்திலும் சரி, முதல்வர் பதவியைக் குறிவைத்து காய்கள் நகர்த்தப்பட்டன. அந்த சவால்களைக் கையாண்டுதான் சித்தராமையா முன்பு 5 ஆண்டுகாலம் முதல்வராக நீடித்தார்.

2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் எச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. புதிய தலைமையைக் கொண்டுவரும் நோக்கத்தில் எடியூரப்பாவை நீக்கிவிட்டு பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது பாஜக. அதன் விளைவாக,

Advertisement

Advertisement

2023- இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பாஜக இழந்தது. அந்த 5 ஆண்டு காலத்தில் ஏராளமான அரசியல் குழப்பங்கள் மக்களை சோர்வடையச் செய்தது.

2023- இல் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோதும், யார் முதல்வர் என்ற குழப்பம் எழுந்தது. சித்தராமையாவுக்கும், டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்காக குடுமிப்பிடி சண்டை நடந்தது. இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், முதல் பாதி ஆட்சியை சித்தராமையா கையிலும், பின்பாதி ஆட்சியை டி.கே. சிவகுமார் கையிலும் ஒப்படைக்கலாம் என வாய்மொழி தீர்வை வழங்கினர்.

சித்தராமையாவுக்கு ராகுலின் ஆதரவு இருக்கக் காரணம், அவர் தேர்தலின்போது கொடுத்த 5 வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றியதுதான்.

கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் "முதல்வர்' பதவி தொடர்பான விவாதங்கள் அடிக்கடி எழுந்து, மறைந்துள்ளன. ஆனால், அவை கடந்த 2 மாதங்களாக மிகத் தீவிர கட்டத்தை எட்டியுள்ளன.

நவம்பர் 20- ஆம் தேதி இரண்டரை ஆண்டுகால ஆட்சிக் காலத்தை முதல்வர் சித்தராமையா நிறைவு செய்தபிறகு, அடுத்த இரண்டரை ஆண்டு காலத்துக்கு டி.கே. சிவகுமார் முதல்வராக்கப்படுவார் என்பதை குறிக்கும் வகையில் "நவம்பர் புரட்சி' நடக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கே.என். ராஜண்ணா, பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் கணித்தனர்.

நவம்பர் மாதமும் வந்தது. இப்போது முடிந்தும்விட்டது. ஆனால் அந்த "புரட்சி' நடக்கவில்லை. ஆனால், முதல்வர் பதவியை அடைவதற்காக டி.கே.சிவகுமார் தீவிரம் காட்டி வந்ததை கர்நாடகம் பதற்றத்துடன் கவனித்தது. அரசியல் குழப்பங்களும் சுறுசுறுப்படைந்தன.

களமிறங்கிய மடாதிபதிகள்: காங்கிரஸ் கட்சியில் அரசியல் புயல் மையம் கொள்ள, டி.கே. சிவகுமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தில்லியில் முகாமிட்டு மேலிடத் தலைவர்களுக்கு ஆட்சித்தலைமை மாற்றத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் செய்தனர். சிலர் ஆதரவு ஊர்வலங்கள் நடத்தினர். ஒக்கலிகர் சங்கங்கள் மட்டுமல்ல, ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த மடாதிபதிகளும் டி.கே. சிவகுமாருக்கு ஆதரவாகக் களமிறங்கினர்.

ஒக்கலிகர் சமுதாய மடாதிபதி நஞ்சாவதூத சுவாமிகள், "ஒக்கலிகர் சமுதாயத்தின் உச்சத் தலைவர் டி.கே. சிவகுமார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பை மறக்க முடியாது. பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்குப் பிறகு ஒக்கலிகர் சமுதாயத்துக்கு முதல்வர் பதவியை தரவேண்டும். எல்லா சமுதாய மக்களும் டி.கே.சிவகுமார் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளனர்' என்று அறிவித்தார்.

இதேவேளை, "அஹிந்தா' என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் சமுதாயங்களைச் சேர்ந்த சங்கங்கள், கூட்டமைப்புகள், மடாதிபதிகள் சித்தராமையாவுக்கு ஆதரவாக களமிறங்கினர்.

சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால், மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. சித்தராமையாவின் குருபர் சமுதாயத்தைச் சேர்ந்த மடாதிபதிகள், அமைப்புத் தலைவர்கள் போன்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் புரட்சியை எதிர்பார்த்த மாநிலத்தில் ஜாதி அலை திசைமாறி வீசியது.

சமாதானக் கொடி: இந்த சர்ச்சை சூழலின் பின்னணியில்தான் காங்கிரஸ் மேலிடம், "முதல்வர்' பதவி குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து முதல்வர் சித்தராமையாவையும் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரையும் அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கியது.

இரு தரப்பிடையே சமாதான வியூகம் வகுக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் கே.சி. வேணுகோபாலை மேலிடம் களமிறக்கியது. இதன் விளைவாக டி.கே. சிவகுமாரை சிற்றுண்டிக்கு அழைத்த சித்தராமையா, கட்சி மேலிடத்தின் சமரச திட்டத்தை தெரிவிக்க அவருடன் இணக்கமாக இருப்பதாக பகிரங்கமாக சிவகுமாரும் அறிவித்தார்.

டிசம்பர் 8- ஆம் தேதிமுதல் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும். பிப்ரவரியில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். எனவே, தற்போதைக்கு நமக்குள் பிரச்னை வேண்டாம். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதன்மூலம், காங்கிரஸ் கட்சியில் இருதரப்புக்கும் இடையே நிலவிய அரசியல் குழப்பத்துக்கு கட்சி மேலிடத்தின் ஒத்துழைப்பில் சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்கை வசீகரிக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற விரும்பவில்லை. ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற அசுரபலம் பொருந்திய அரசியல் சக்தியை எதிர்கொள்ள சித்தராமையா போன்ற தலைவர் தேவை என்று காங்கிரஸ் கருதுகிறது.

எனவே, தற்போது உள்ளபடி முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் டி.கே. சிவகுமாரும் நீடிப்பதையே நல்ல தீர்வாக காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதன்மூலம் கர்நாடக அரசியல் களத்தை தாக்க வந்த புயல், எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாமல் கரையைக் கடந்துள்ளது. அதற்காக மீண்டும் புயல் வராது என்று கூறிவிட முடியாது என்கின்றனர் அரசியல் நிலவரத்தை உற்று நோக்குபவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments