முகப்பு
இந்தியா

இமயமலை அடிவாரத்தில் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமங்கள் கண்டெடுப்பு!

45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டது பற்றி...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 3:27 PM
- கோப்புப் படம்
பகிர்:

உத்தரகாண்டில் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இமயமலை அடிவாரத்தின் புவியியல் வரலாற்றை மாற்றியெழுதும் விதமாக உத்தரகாண்ட் எல்லையில் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

வாடியா இமயமலை புவியியல் ஆய்வு நிறுவனம் இமயமலை தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம் உத்தரகாண்ட் எல்லையில் மோகந்த் என்னும் பகுதியில் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

தரை வாழ் உயிரினங்களின் படிமங்கள் மட்டுமே இந்தப் பகுதியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக நீர் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மூன்று வெவ்வேறு மீன் இனங்களின் காது எலும்புகளை உள்ளடக்கிய இந்த படிமங்கள் சிவாலிக் பகுதியின் வரலாற்றுக்கு முந்தைய சூழல் பற்றிய பார்வையை வழங்குகிறது என ஆராய்ச்சியை வழிநடத்திய வாடியா நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் நிங்தௌஜாம் பிரேம்ஜித் சிங் கூறினார்.

இவரது குழு ஸ்னேக்ஹெட், கோபி, கௌராமி என்கிற 3 வகையான மீன் புதை படிமங்களை கண்டெடுத்துள்ளனர். இதில், கௌராமி வகை மிக அரிதானது. உலகிலேயே இரண்டாவது முறையாக இந்தோனேசியாவின் சுமத்ராவிற்கு பின் இங்கு மட்டுமே அது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவை வெறும் புதை படிமங்கள் அல்ல என்றும் இழந்துபோன வாழ்வியல் எச்சங்கள் என்றும் பிரேம்சிங் ஜித் தெரிவித்தார்.

மோகந்த் பகுதி சுமார் 45 முதல் 48 லட்சம்ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காலத்தில் அடர்ந்த தாவரங்களால் சூழப்பட்ட அமைதியான, நன்னீர்ப் பகுதியாக இருந்துள்ளது. இது அநேகமாக ஒரு ஏரியாகவோ அல்லது மெதுவாக ஓடும் நதியாகவோ இருந்திருக்கலாம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

”கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு ஆய்வுகளின் போது, ​​நாங்கள் பல புதைபடிம அடுக்குகளை அடையாளம் கண்டோம். அதில் பெருமளவு மண்ணுடன் இருந்த மாதிரிகளைச் சேகரித்து நிறுவனத்திற்குக் கொண்டு சென்றோம். ஆய்வகத்தில், அந்த மாதிரிகளை வெவ்வேறு சல்லடைகள் மூலம் கழுவி, உலர்த்தி, படிமங்களைப் பிரித்தெடுக்க நுண்ணோக்கி வழியே அந்தப் பொருட்களை ஆய்வு செய்தோம்” என்று ஆய்வு அனுபவம் பற்றி பிரேம்சிங் ஜித் பகிர்ந்தார்.

மேலும், தற்கால உயிரினங்களிலிருந்து வேறுபடும் இந்திய புதர் எலியின் புதை படிமத்தையும் இந்தக் குழுவினர் ஆய்வில் கண்டெடுத்தனர். இதன்மூலம், அந்தப் பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த பல்லுயிர் பெருக்கம் பற்றி அறியமுடிகிறது.

ஆய்வின் மூலம், இமயமலை அடிவாரத்தின் நீர் வாழ் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய தகவல்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான ஆண்டுகளில் நாம் வாழும் பகுதி எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கான முக்கியத் தரவுகளையும் இது வழங்கியுள்ளது. மேலும், அந்தப் பகுதியின் ஆய்வுக் கண்ணோட்டத்தையும் இது மாற்றியுள்ளது.

இந்த ஆய்வில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம், தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தைவானில் உள்ள அகாடமியா சினிகாவின் பல்லுயிர் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

'4.5 million years in the making': Ancient fish fossils unearthed near Uttarakhand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments