தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை: பிரியங்கா காந்தி பேச்சு
தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை வீசுவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, தொகுதி மறுவரையறை மசோதாவில் “அரசியல் வாடை” வீசுவதாகக் கூறியுள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மேற்கொள்வதில் மத்திய அரசின் அணுகுமுறையைக் கேள்வி எழுப்பியிருக்கும் பிரியங்கா காந்தி, அவசரமான அணுகுமுறை ஏன் என்று கேட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வின் போது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடி "முழுமையான விவரங்களை" வெளியிடவில்லை என்று கூறினார்.
Advertisement
Advertisement
சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்களும் அதன் வரலாறும் முழுமையாக விளக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த விளக்கம் குறித்தும் விமர்சித்துள்ளார்.
அதுபோல, மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளோம். ஆனால், மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில்தான் அரசியல் உள்ளது. இப்போது ஏன் இதில் அவசரம் காட்டுகிறது மத்திய அரசு என்பதே கேள்வி என்று பிரியங்கா காந்தி கேட்டுள்ளார்.
பல காலமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக பாஜக போராடி வந்த போதிலும், அதற்கான பெருமையை தாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது போல பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டே மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். உடனடியாக இந்த மசோதாவை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தற்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிப்பது போல பேசுகிறார் பிரதமர் மோடி. அதற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துவிட்டது. இப்போது விவாதமே மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரம்தான்.
மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவில், அதன் செயல் முறை குறித்து ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பங்கு கிடைக்காது; எனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தரவுகள் இல்லாத 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிடுகிறது.
விசாரணை அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது, தற்போது தொகுதி மறுவரையறை என்ற பெயரில் ஜனநாயகத்தின் மீது நேரடியாகவே தாக்குதலை தொடுக்கிறது. ஒருவேளை, இந்த தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நாட்டின் ஜனநாயகம் ஒழித்துக் கட்டப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.