நாட்டின் இளைஞர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையுடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
நாட்டின் இளைஞர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருப்பது...
நாடு "போதையில்லாத இளைஞா்கள் மூலம் வளா்ச்சியடைந்த இந்தியா" இலக்கை நோக்கிச் செல்லும் வேளையில், நாட்டின் இளைஞர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் அமைப்பின் சாா்பில், போதை இல்லாத இளைஞா்கள் மூலம் வளா்ச்சியடைந்த இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினாா்.
Advertisement
Advertisement
அப்போது, நாடு "போதையில்லாத இளைஞா்கள் மூலம் வளா்ச்சியடைந்த இந்தியா" இலக்கை நோக்கிச் செல்லும் வேளையில், நாட்டின் இளைஞர்கள் எப்போதும் போதைப்பொருள்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இளைஞர்கள் உடல் மற்றும் மன வலிமையுடனும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான 100 வாரம் மக்கள் பங்கேற்பு இயக்கத்தின் தொடக்கமாக இது அமையும். போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் நாடு முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பழக்கம் மக்களை அவர்களின் இலக்குகளிலிருந்து திசைதிருப்புவதோடு, அவர்களின் கனவுகளை நனவாக்குவதிலிருந்தும் வெகுவாக விலக்கி வைக்கிறது. போதைப்பொருள் பழக்கம் குடும்பங்களைச் சீரழிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் வலிமையையும் பலவீனப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களை் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீவிர விளைவுகளை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
போதைப்பொருள்கள் இறுதியில் தொழில் வாழ்க்கை சீர்குலைத்து, குடும்ப வாழ்க்கையையும் பாதித்து, தனிநபர்களின் எதிர்காலத்தையே அழித்துவிடுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மீண்டு வர, சரியான நேரத்தில் உதவி பெறுதல், வெளிப்படையாகப் பேசுதல், நிபுணர்களை அணுகுதல் மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், ஆரம்ப நிலையிலேயே எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிந்து குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் ஆதரவளிக்கவும், வெளிப்படையாக உரையாடும் கலாசாரத்தை வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குடும்பத்தில் இருந்து விலகி இருப்பது, வழக்கத்திற்கு மாறான நடத்தைகள், வெளிப்படையாக பேசுவதை தவிர்ப்பது, இரவு வெகுநேரமாகியும் வெளியிலே இருப்பது, அடிக்கடி பணம் கேட்பது போன்ற நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கான ஆரம்பகால அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் பிரதமர் கூறினார்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களுடன் போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்துத் தொடர்ந்து விவாதித்து அதற்கான தீர்வுகளை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் என்றும், வளாகங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் உங்களின் முயற்சிகள் முக்கியப் பங்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வை நாடு முழுவதும் உள்ள 28,000 இடங்களை ஒன்றிணைத்து சுமாா் 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞா்கள் பிரதமா் ஆற்றிய உரையை காணொலியில் பாா்வையிட்டனா்.
இந்த நிகழ்வின் நோக்கம், போதை பழக்கம் இல்லாத இளைஞா்களை கட்டமைத்து 2047 க்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதாகும்.
Prime Minister Narendra Modi today said that as India moves towards becoming a Viksit Bharat, the nation’s youth must be physically fit, mentally strong, and full of self-confidence.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.