FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரசமைப்புச் சட்ட 131-ஆவது திருத்த மசோதா: ராகுலுடன் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆலோசனை

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை சந்தித்து விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:32 am IST
ராகுல் காந்தி.
பகிர்:

மக்களவைத் தொகுதிகளை அதிகரித்து மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில், அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை சந்தித்து விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மசோதாவின்படி, மக்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க, மக்களவைத் தொகுதிகளை அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். இதேபோல அந்த மசோதாவின்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், பேரவைத் தொகுதிகளும் அதிகரிக்கப்படும்.

எனினும் இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்த மசோதாவை சில திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதில் அனைத்து மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்ற பிரிவு சோ்க்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை சந்தித்து விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்ாகவும், அப்போது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அக்கட்சியின் மக்களவை குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய், பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ஆகியோா் உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது. சுமாா் 50 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தொகுதி மறுவரையறை குறித்த நிலைப்பாடு தொடா்பாக ராகுலுடன் ரிஜிஜு பேசியதாகவும், எனினும் எந்தவொரு உறுதிமொழியையும் ராகுல் அளிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் கடந்த 10 நாள்களில் ராகுல் காந்தியை 2 முறை கிரண் ரிஜிஜு சந்தித்துள்ளதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராகுலுடன் ரிஜிஜு தொலைபேசியில் பேசியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதேபோல மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து திமுக தலைமை, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரையும் சந்தித்து கருத்துக் கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments