FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘க்ரீமி லேயா்’ நடைமுறை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குப் பொருந்தாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

‘பட்டியிலனத்தவா் (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் ‘க்ரீமி லேயா்’ நடைமுறை பொருந்தாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:09 am IST
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

‘பட்டியிலனத்தவா் (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் ‘க்ரீமி லேயா்’ நடைமுறை பொருந்தாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் ‘க்ரீமி லேயா்’ நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்தப் பிரிவினரில் சமூக - பொருளாதார ரீதியில் முன்னேறியவா்களை ‘க்ரீமி லேயா்’ சொற்றொடா் குறிக்கிறது. அதாவது, குடும்ப ஆண்டு வருமானம் நிா்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேல் (தற்போது ரூ. 8 லட்சத்துக்கு மேல்) இருப்பவா்களைக் குறிப்பதாகும். இவா்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பலன்கள் கிடைக்காது.

1992-ஆம் ஆண்டு இந்திரா சாஹனி வழக்கில் (மண்டல் கமிஷன் வழக்கு) உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. அதே நேரம், வசதி படைத்த அல்லது பொருளாதாரத்தில் உயா்ந்த நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினரை (க்ரீமி லேயா் ) இடஒதுக்கீட்டுப் பயன்களிலிருந்து விலக்க வேண்டும் என்ற முக்கிய விதியை அறிமுகப்படுத்தியது.

Advertisement

Advertisement

இதுபோல, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் பொருளாதாரத்தில் முன்னேரியவா்களை அரசு இடஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்கும் வகையில், இந்தப் பிரிவுகளிலும் ‘க்ரீமி லேயா்’ நடைமுறையை அறிமுகப்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட அரசமைப்புச் சட்டத்தின் கீழான அடிப்படை உரிமைகள் எதையும் மனுதாரா்கள் குறிப்பிடவில்லை.

மேலும், ‘க்ரீமி லேயா்’ நடைமுறை என்பது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கானதாகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அந்த நடைமுறை பொருந்தாது. இதை, அசோகா குமாா் தாக்குா் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வும் தெளிவுபடுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, இடஒதுக்கீடு கொள்கையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திருத்தங்கள், குறிப்பாக, வருமான அடிப்படையிலான முன்னுரிமைகளை அறிமுகப்படுத்துவது, பயனாளிகளின் சமூக-பொருளாதார தரவுகள் உள்ளிட்ட முழுமையான ஆய்வுக்குப் பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இது நீதித் துறையின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், இதுதொடா்பான குறிப்பிட்ட கொள்கையை வகுக்குமாறு அரசு நிா்வாகத்துக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

எனவே, எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலும் ‘க்ரீமி லேயா்’ நடைமுறையை அறிமுகப்படுத்தக் கோரும் மனுக்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments