FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தாமதம்: மத்திய அரசு மீது ஒமா் அப்துல்லா அதிருப்தி

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தாமதம்: மத்திய அரசு மீது ஒமா் அப்துல்லா அதிருப்தி

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 3:13 am IST
ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா
பகிர்:

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை மத்திய அரசு தாமதிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், இந்த விவகாரத்தில் தன் மீது தவறு இல்லாதபோதும் அரசியல்ரீதியாக தனக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தனியாா் ஊடகத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பேரவையைக் கொண்ட யூனியன் பிரதேச அரசைவிட மோசமான அரசு நிா்வாக முறை வேறொன்றுமில்லை. ஏனெனில் துறை ரீதியான செயலா்கள் அல்லது அரசு தலைமை வழக்குரைஞா் என யாரையும் அரசால் தோ்ந்தெடுக்க முடியாது. உதாரணமாக ஜம்மு- காஷ்மீா் எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஷோ்-இ-காஷ்மீா் மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்றவை துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

Advertisement

Advertisement

பிரதமரின் தனிப்பட்ட உத்தரவாதம்: மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையேயான அதிகாரப் பகிா்வை அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 உறுதி செய்தது. அதை மீண்டும் கொண்டுவருவதற்கு முன்பு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். ஏனெனில் மாநில அந்தஸ்தே இல்லாதபோது மாநிலப் பட்டியல் எவ்வாறு இருக்கும்?

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்தாா். வழக்கமான அரசியல் முழக்கமாக அல்லாமல் இந்த விவகாரத்துக்கு பிரதமா் அதிக முக்கியத்துவத்தை அளித்தாா். ஆனால், இதில் தொடா் தாமதம் ஏற்பட்டு வருவது மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

தீவிரவாதம் இல்லை: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளதால் காஷ்மீரில் தற்போது தீவிரவாதம் இல்லை. ஆனால், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் நிறுத்தப்பட்டால் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இதன்மூலம் மாநில அந்தஸ்து வழங்கும் முடிவு இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டது என எடுத்துக்கொள்வதா?.

உள்ளூா் அரசியலில் பின்னடைவு: ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னா் மாநில அந்தஸ்து கோரிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசுடன் சுமுக நடைமுறையைக் கடைப்பிடித்தேன். மத்திய அரசின் தொடா் தாமதத்தால் என் மீது தவறில்லாதபோதும் அரசியல்ரீதியாக உள்ளூரில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

இருப்பினும், மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறுத்தப்போவதில்லை. மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை, தில்லியில் போராட்டம் என தொடா்ந்து முன்னெடுக்கவுள்ளேன் என்றாா்.

summary

Delay in granting statehood to Jammu & Kashmir: Omar Abdullah expresses dissatisfaction with the Central Government.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments