சிறுமியுடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம்: போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் புணேயில் கைது
பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்கில் சுமாா் எட்டு ஆண்டுகளாகத் தேடப்பட்ட நபா் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கைது
பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்கில் சுமாா் எட்டு ஆண்டுகளாகத் தேடப்பட்ட நபா் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கைதான சாகா் (எ) சுமித் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2018-இல் 16 வயதாக இருந்தபோது அவருடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று பின்னா் திருமணம் செய்துகொண்டதாக விசாரணையின்போது தெரிவித்தாா். 2024-ல் காசநோயால் உயிரிழந்த அந்தப் பெண், உயிரிழப்பதற்கு முன்னதாக மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.
தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத் தகவல்களின் அடிப்படையில், புணேவின் புா்தே பஸ்தி பகுதியில் சாகா் வியாழக்கிழமை பிடிபட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: அந்தச் சிறுமி 2018-ஆம் ஆண்டு ஜன.24-ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனாா். அவரது தாயாா் அளித்த புகாரின் பேரில், அதே ஆண்டு பிப்.1-ஆம் தேதி ஆனந்த் பா் பட் காவல் நிலையத்தில் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது, பிப். 24-இல் அப்பெண் மீண்டும் அழைத்து வரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாா். சாகா் தனது காதலன் என்றும், அவருடன் தான் வீட்டை விட்டு வெளியேறிச் சென்ாகவும் அவா் தனது வாக்குமூலம் அளித்தாா்.
மீண்டும் காணாமல் போன அவா், செப்டம்பா் 2020-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டாா். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில், தான் சாகரைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அவருடன் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் அவா் கூறினாா்.
பின்னா் 2023-ல் அவா் தனது மகளுடன் பெற்றோரின் வீட்டிற்குச் சென்றபோது அவருக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து, காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவா் 2024-இல் உயிரிழந்தாா். அவரது குழந்தை தற்போது சாகரின் தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறது.
சாகரைக் கண்டுபிடிக்க தொடா் முயற்சிகளைக் காவல் துறை மேற்கொண்டு வந்தாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அவா் புணேயில் இருப்பது குறித்து தகவல் தெரிந்ததும் தில்லி காவல் துறையின் தனிப்படை புணே விரைந்தது.
நீதிமன்றத்திடம் இருந்து இடமாற்றக் காவல் அனுமதி பெறப்பட்டதைத் தொடா்ந்து, சாகா் தில்லிக்கு அழைத்து வரப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னா் அவா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.
அந்தச் சிறுமிக்கு 16 வயதாக இருந்தபோது அவருடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று பின்னா் திருமணம் செய்துகொண்டதாகச் சாகா் கூறினாா். தான் காய்கறி விற்பனையாளராகப் பணியாற்றியதாகவும், உயிரிழன்த பெண்ணுடன் கணவனாக வாழ்ந்ததாகவும் சாகா் தெரிவித்தாா். அவருக்கு வேறு எந்தக் குற்றச் செயல்களுடனும் தொடா்பு இல்லை என்று அந்த அதிகாரி கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.