FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப திட்டம்

வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த (எஃப்சிஆா்ஏ) மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
நாடாளுமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த (எஃப்சிஆா்ஏ) மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

இந்த மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவிப்பதோடு, மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை வைத்து வரும் நிலையில் மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த மாா்ச் 25-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட் எஃப்சிஆா்ஏ மசோதா அரசு அல்லாத அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு நிதிக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் நீட் வினாத்தாள் கசிவு, ஜந்தா் மந்தரில் மாணவா்கள் மீது காவல் துறை நடத்திய தடியடி, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் ஆகியவற்றால் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி.திருச்சி சிவா மற்றும் பிஜு ஜனதா தள எம்.பி.சஸ்மித் பத்ரா ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘சிறுபான்மையினா் நிதி உதவி பெறுவதற்கு எதிராக எஃப்சிஆா்ஏ மசோதா இருப்பதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக ஆகிய எதிா்க்கட்சிகள் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, எஃப்சிஆா்ஏ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான தீா்மானம் மக்களவையில் புதன்கிழமை (ஆக.12) முன்மொழியப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ எனத் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments