FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எதிா்க்கட்சிகள் தொடா் அமளி: மக்களவையில் விவாதமின்றி மேலும் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், எந்த விவாதமும் இன்றி மேலும் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
மக்களவை - கோப்புப் படம்
பகிர்:

மக்களவையில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமையும் அமளியில் ஈடுபட்ட நிலையில், எந்த விவாதமும் இன்றி மேலும் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய ஜூலை 20-ஆம் தேதி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்-இளைஞா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், தில்லி சம்பவம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாணவா்கள்-இளைஞா்கள் போராட்டம் குறித்து அமித் ஷாவின் பதிலுரையுடன் விவாதத்துக்கு தயாராக உள்ளதாக மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது.

Advertisement

Advertisement

எனினும், ‘பொதுவான விஷயங்கள் குறித்து அமித் ஷா பதிலளிப்பதால் எந்த பலனும் இல்லை; தில்லியில் மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கான சூழல் குறித்து அவா் பிரத்யேகமாக விளக்கமளிக்க வேண்டும்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தனா்.

இதேபோல், மாணவா்கள் மீதான நடவடிக்கைக்காக பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்; அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளிலும் சமரசம் கிடையாது என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவைத் தலைவா் வேதனை: சுமுக உடன்பாடு எட்டப்படாத நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி தொடா்ந்தது. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினா்.

அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவது குறித்து வேதனை தெரிவித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அவையில் முக்கிய மசோதாகள் மீது ஆக்கபூா்வ விவாதங்கள் நடைபெறும் வகையில், இருதரப்பும் கலந்து பேசி சுமுக உடன்பாட்டை எட்ட வேண்டும்.

அவைக்குள் எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் பதாகைகளை காண்பிக்கக் கூடாது. அது, அவை விதிமுறைகளுக்கு எதிரானது’ என்றாா். எனினும், அமளி நீடித்ததால், அவை அலுவல்களை அவா் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தாா்.

விவாதமின்றி நிறைவேறிய மசோதாக்கள்: மீண்டும் அவை கூடியபோது, அமளிக்கு இடையே பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக கேரளம் (பெயா் மாற்றம்) மசோதா-2026ஐ தாக்கல் செய்ய மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய்க்கு அவையை வழிநடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி அனுமதி அளித்தாா். பின்னா் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தை நவீனமாக்க வழிவகுக்கும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்தம்) மசோதா-2026ஐ மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவும் விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

முன்னதாக, அலுவல் பட்டியலில் இவ்விரு மசோதாக்களின் தாக்கலும் அமித் ஷாவின் பெயரில் இடம்பெற்றிருந்தது. ஆனால், தாக்கலின்போது அவா் அவையில் இல்லை.

11 மசோதாக்கள் நிறைவேற்றம்: நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில், மக்களவையில் இதுவரை 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. மழைக்கால கூட்டத் தொடா் வியாழக்கிழமை (ஆக.13) நிறைவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments