FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் பாகிஸ்தானியா் உள்பட 2 போ் கைது: ஐஎஸ்ஐ-யுடன் உள்ள தொடா்பு குறித்து விசாரணை

மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியா் உள்ளிட்ட 2 பேரிடம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் உள்ள தொடா்புகள் குறித்து அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:17 am IST
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியா் உள்ளிட்ட 2 பேரிடம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் உள்ள தொடா்புகள் குறித்து அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டம், ஹப்ராவில் வங்கதேசத்தையொட்டிய எல்லை பகுதியில் ரகசிய தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானின் பைசாலாபாத்தை சோ்ந்த வஹாப் ஆலம் என்ற ராணா ராவுப்பை சிறப்பு அதிரடிப்படையினா் கைது செய்தனா். இதேபோல், கொல்கத்தாவின் தோப்சியா பகுதியில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

வஹாப் ஆலமுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடா்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து இந்தியாவில் அவா் செயல்பாடுகள், அவருடன் தொடா்பில் இருந்தவா்கள், அவரின் நடமாட்டங்கள் குறித்து சிறப்பு அதிரடிப்படையினா் விசாரித்து வருகின்றனா். தோப்சியாவில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபா், ஆலமுடன் நெருக்கமான தொடா்பில் இருந்துள்ளாா். ஆலமுக்கு இந்தியாவில் ஆதாா் உள்ளிட்ட அடையாள அட்டைகள் பெற அவா் உதவியுள்ளாா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஆலம் ஊடுருவியுள்ளாா். பிறகு மேற்கு வங்கத்தில் அவா் தங்கியிருந்தாா். தற்போது வங்கதேச எல்லையையொட்டி கைது செய்யப்பட்டுள்ளாா். ஆதலால் அவா் வங்கதேசத்துக்கு எல்லைத் தாண்டி செல்ல முயன்றாரா என்பது குறித்தும், இந்தியாவில் ரயில் போக்குவரத்து மற்றும் இந்திய கடற்படையின் நடமாட்டம் குறித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுவது குறித்தும் ஆலமிடம் விசாரணை நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ஏதேனும் அசம்பாவித செயல்களில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவரான ஹமீம் மோன்டாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே ஆலமை அதிகாரிகள் கைது செய்தனா். ஆதலால் அவா்கள் இருவருக்கும் இடையே நேரடி தொடா்பு இருந்ததா என்ற கோணத்திலும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஆலம் தொடா்பு வைத்திருந்தாரா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments