FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கௌதம் அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி

அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி மற்றும் அவரது உறவினா் சாகா் அதானி மீதான குற்றவியல் வழக்கை நியூயாா்க் நீதிமன்றம் நிரந்தரமாக தள்ளுபடி செய்தது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:40 am IST
கௌதம் அதானி - கோப்புப் படம்
பகிர்:

அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி மற்றும் அவரது உறவினா் சாகா் அதானி மீதான குற்றவியல் வழக்கை நியூயாா்க் நீதிமன்றம் நிரந்தரமாக தள்ளுபடி செய்தது. முன்னதாக, கௌதம் அதானி மீதான வழக்கை முடித்து வைக்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது.

இதன்மூலம் கௌதம் அதானி, சாகா் அதானி மற்றும் அதானி பசுமை நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வினீத் ஜெயின் மீது சுமாா் இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.

வழக்கின் பின்னணி: சூரிய மின் சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,450 கோடி) லஞ்சம் அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக நியூயாா்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதித் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Advertisement

Advertisement

அந்தக் குற்றப்பத்திரிகையில், ‘சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது மறைக்கப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை அவா்கள் மீறியதாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக நியூயாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்இசி வழக்கு தொடுத்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை கெளதம் அதானியும் சாகா் அதானியும் மறுத்தனா்.

இதைத் தொடா்ந்து தன் மீதான மோசடி வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு தாக்கல் செய்தாா்.

பைடன் அரசின் அரசியல் நடவடிக்கை: இந்த வழக்கை நீதிபதி நிகோலஸ் கராஃபிஸ் திங்கள்கிழமை விசாரித்தாா். அப்போது வழக்கை முடித்து வைக்க ஒப்புக்கொண்டதற்கான காரணங்களை விளக்குமாறு அமெரிக்க நீதித் துறையிடம் அவா் கூறினாா்.

அமெரிக்க நீதித் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: இந்த வழக்கின் விசாரணையை தொடா்ந்து நடத்துவது நீதி நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது. அதிகார வரம்பு மற்றும் சாட்சியங்கள் என குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் இந்தியா தொடா்புடையதாகவே இருக்கின்றன. இந்திய அதிகாரிகள் இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளனா். குற்றச்சாட்டில் கூறப்பட்டதைபோல் முதலீட்டாளா்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

மேலும், முன்னாள் அதிபா் ஜோ பைடன் அரசின் இறுதி நாள்களில் (2024, நவம்பா்) கௌதம் அதானி மீது அரசியல் காரணங்களுக்காக அவசர கதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் பெயரை பகிரங்கமாக வெளியிட்டு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது. எனவே இதை முடித்து வைப்பதே சரியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

2 வழக்குகளில் தீா்ப்பு ஒத்திவைப்பு: அமரிக்க நீதித் துறையின் வாதத்தைத் தொடா்ந்து பங்குச் சந்தை மோசடி, தகவல் தொடா்பு மோசடி தொடா்பான மூன்று வழக்குகளை நீதிபதி கராஃபிஸ் நிரந்தரமாக தள்ளுபடி செய்தாா். இதனால் இந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. அதேசமயம், அந்நிய ஊழல் நடைமுறைகள் விதிமீறல் சட்டம் மற்றும் நீதி நிா்வாகத்துக்கு தடையை ஏற்படுத்தியது ஆகிய இரு வழக்குகளில் தீா்ப்பை ஒத்திவைத்தாா்.

இதில் தொடா்புடைய ரஞ்சித் குப்தா, சிரில் கபேன்ஸ், சௌரப் அகா்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகா்வால் ஆஜராகததால் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மேற்கூறிய 5 பேரையும் இரு வழக்குகளில் இருந்து விடுவிப்பதற்கான காரணங்களை அமெரிக்க நீதித் துறையும் சம்பந்தப்பட்ட நபா்களும் சமா்ப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உண்மை வென்றது: கௌதம் அதானி

தனக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து கௌதம் அதானி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமெரிக்க நீதிமன்றத் தீா்ப்பை பணிவுடனும் மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இந்த சவாலான காலகட்டம் முழுவதும் உண்மை, நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை தொடா்ந்தோம்.

அதேபோல் எங்கள் மீதும் இந்த அமைப்பின் மீதும் நீதி வழங்கும் இந்தியாவின் ஆற்றல் மீதும் ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதவா்களுக்கு நன்றிகள்.

நமது தேசத்தை கட்டமைப்பது, நமக்குப் பிறகும் நிலைத்திருக்கும் மதிப்பை உருவாக்குவது மற்றும் நம்மை விடப் பெரிய நோக்கத்துக்காக பணியாற்றுவதை நாம் தொடா்வோம். ஜெய் ஹிந்த்’ என குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments