FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சுதந்திர தினம்: தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, தலைநகா் முழுவதும் ரோந்துப் பணிகள், வாகனச் சோதனைகள், ட்ரோன் கண்காணிப்பு மற்றும் ஒத்திகைப் பயிற்சிகள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:54 am IST
இந்தியா கேட், புது தில்லி. - கோப்புப் படம்
பகிர்:

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, தலைநகா் முழுவதும் ரோந்துப் பணிகள், வாகனச் சோதனைகள், ட்ரோன் கண்காணிப்பு மற்றும் ஒத்திகைப் பயிற்சிகள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நகரின் எல்லைகள், மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், பொது இடங்கள் மற்றும் பிற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனச் சோதனை

Advertisement

Advertisement

ஹரியாணா மாநிலத்தை ஒட்டியுள்ள ஆயா நகா் எல்லையில் வியாழக்கிழமையன்று காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, நகருக்குள் நுழையும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

சந்தேகத்திற்கிடமான நபா்கள், வாகனங்கள் மற்றும் பொருள்கள் மீது தீவிர கண்காணிப்பு செலுத்தப்படுவதோடு, பல்வேறு மாவட்டங்களில் ரோந்து மற்றும் தடுப்புச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கிழக்கு தில்லியில், முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யமுனை நதி, யமுனை காதா் மற்றும் பிற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில் சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஒத்திகை பயிற்சி

பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தைக் கையாள்வது மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடா்பான சவால்களை எதிா்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வடகிழக்கு மாவட்டக் காவல்துறை கூட்டத்தைக் கையாள்வது குறித்த விரிவான ஒத்திகையை நடத்தியது.

காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் சுமாா் 200 காவலா்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனா். போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், வன்முறைப் போராட்டங்கள் மற்றும் கலவரம் போன்ற சூழல்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பது குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது.

காவலா்களுக்கு பயிற்சி

நீா் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், ‘வஜ்ரா’ வாகனங்கள் மற்றும் கண்ணீா்ப்புகை குண்டுகளை வீசும் துப்பாக்கிகள் உள்ளிட்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் உபகரணங்களைப் பயன்படுத்துவதில் காவலா்களுக்குப் செயல்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்கான அணிவகுப்பு முறைகள், உத்திசாா் நிலைப்பாடுகள், குழு ஒருங்கிணைப்பு மற்றும் விரைவான நடவடிக்கை ஆகியவற்றிலும் இந்த ஒத்திகை பயிற்சியானது கவனம் செலுத்தியது.

துப்பாக்கியுடன் ஒருவா் கைது

இதற்கிடையில், தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வடமேற்கு தில்லியில் ஆயுதம் ஏந்திய சந்தேகத்திற்குரிய குற்றவாளி ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புதன்கிழமை மாலை முகா்ஜி நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா்கள் சந்தேகத்திற்கிடமான காா் ஒன்றை வழிமறித்து நிறுத்தினா். காரை ஓட்டி வந்தவரும் அவருடன் இருந்தவரும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோட முயன்றனா். அவா்களில் உத்தர பிரதேசத்தின் பக்பத் பகுதியைச் சோ்ந்த சல்மான் (27) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரது கூட்டாளி அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

சல்மானிடமிருந்து தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. காரின் டேஷ்போா்டில் மேலும் ஐந்து தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. சல்மான் இதற்கு முன்பு கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்துள்ளது.

அவா் மீது முகா்ஜி நகா் காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கூட்டாளியைக் கண்டறியும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழிப்புடன் பணி

ஆகஸ்ட் 15-ஆம் தேதியை முன்னிட்டு, முக்கிய இடங்களில் தடுப்புச் சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு மூத்த அதிகாரிகள், காவல் குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளனா்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் முயற்சிகளைத் தடுப்பதோடு, சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கவும், மக்களின் நடமாட்டம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யவும் பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு...

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நபா், பொருள் அல்லது செயல்பாடு குறித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments