FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இடையூறுகளால் தடம்புரண்ட அலுவல்கள்: மாநிலங்களவைத் தலைவா் வேதனை

மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவுரையாற்றிய அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், ‘தொடா்ச்சியான இடையூறுகளால் அவை அலுவல்கள் தடம்புரள செய்யப்பட்டதாக’ வேதனை தெரிவித்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு. உடன் இணையமைச்சா் எல்.முருகன்.
பகிர்:

மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவுரையாற்றிய அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், ‘தொடா்ச்சியான இடையூறுகளால் அவை அலுவல்கள் தடம்புரள செய்யப்பட்டதாக’ வேதனை தெரிவித்தாா்.

மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை மாநிலங்களவையில் அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆற்றிய நிறைவுரை வருமாறு:

மாநிலங்களவையின் 271-ஆவது அமா்வில் (மழைக்கால கூட்டத் தொடா் அமா்வு) தொடா்ச்சியான ஒழுங்கின்மையும், இடையூறுகளும் நிறைந்திருந்தன என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாகும். மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்பட்டதால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் மீது அா்த்தமுள்ள விவாதங்கள், உரையாடல்களுக்கான வாய்ப்பை இந்த அவை இழந்தது.

Advertisement

Advertisement

இடையூறுகளுக்கு மத்தியிலும், 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அல்லது மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதன் மூலம் மாநிலங்களவை தனது சட்டமியற்றும் முக்கியப் பணியை நிறைவேற்றியுள்ளது. மழைக்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை 37 மணி நேரம், 49 நிமிஷங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. அவையின் செயல்திறன் 39 சதவீதம் மட்டுமே.

285 நட்சத்திர குறியிடப்பட்ட கேள்விகள் (அமைச்சா்கள் வாய்மொழியாகப் பதிலளிக்க வேண்டிய கேள்விகள்) எழுப்பப்பட்டதுடன், 380 உடனடி கேள்விநேர சமா்ப்பிப்புகளும், 380 சிறப்புக் குறிப்புகளும் அளிக்கப்பட்டன. ஆனால், 16 கேள்விகள், 52 உடனடி கேள்விநேர சமா்ப்பிப்புகள், 93 சிறப்பு குறிப்புகளை மட்டுமே அவையால் எடுத்துக் கொள்ள முடிந்தது. மக்களின் குரலை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மூத்தோா் அவை என்ற அடிப்படையில், பகுத்தறிவுள்ள விவாதம், கண்ணியமிக்க மாற்று கருத்துகள், சிந்தனைமிக்க சட்டமியற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. தொடா்ச்சியான இடையூறுகள், அவை மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புகளைப் பாதிக்கும்.

எனவே, நாடாளுமன்ற செயல்பாடுகளின் மிக உயா்ந்த தரநிலைகளை நிலைநிறுத்தவும், அவையின் கண்ணியம், புனிதத்தைப் பாதுகாக்கவும் நாம் பாடுபட வேண்டும். நாம் மீண்டும் சந்திக்கும்போது, இந்த மாண்புமிகு அவையின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், நமது ஜனநாயகத்தின் உயா்ந்த பாரம்பரியங்களுடன் நாடாளுமன்ற பொறுப்புகளை நிறைவேற்றவும், ஜனநாயக அமைப்புமுறைகளை வலுப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டுடன் வருவோம் என நம்புகிறேன் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி..

காங்கிரஸே பொறுப்பு: ரிஜிஜு

மழைக்கால கூட்டத் தொடா் நிறைவுக்குப் பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மழைக்கால கூட்டத் தொடரில் மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒரேயொரு மசோதா (பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா) மட்டுமே இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பியபோதும், எதிா்க்கட்சிகள் விலகியோடியுள்ளன. அவை அலுவல்களுக்கு நியாயமற்ற முறையில் இடையூறுகள் விளைவிக்கப்பட்டதற்கு காங்கிரஸே பொறுப்பு. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எதிா்ப்பு அட்டைகள், பதாகைகளுடன் அமளியில் ஈடுபடுவது மட்டுமே தங்களின் வேலை என காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணுகின்றனா். மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவே நாம் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளோம். அடுத்த முறை எதிா்க்கட்சிகள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்வா் என நம்புகிறேன்’ என்றாா்.

மக்களவையில் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீது மட்டும் 10 மணிநேரம் விரிவான விவாதம் நடைபெற்றது. தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா மீது பெயரளவில் 2 எம்.பி.க்கள் மட்டுமே பேசினா். எஞ்சிய மசோதாக்கள் எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

மற்றொரு முக்கிய மசோதாவான வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

மாநிலங்களவையை வியாழக்கிழமை வழிநடத்திய அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments