எதிா்க்கட்சிகள் அமளி: முடங்கியது நாடாளுமன்றம்
எதிா்க்கட்சிகளின் தொடா் அமளி காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் அடுத்தடுத்து 6 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
எதிா்க்கட்சிகளின் தொடா் அமளி காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் அடுத்தடுத்து 6 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும், மறைந்த முன்னாள் எம்.பி.க்கள் 6 பேருக்கு இரங்கல் குறிப்பை அவைத் தலைவா் ஓம் பிா்லா வாசித்தாா்.
அப்போது, நீட் வினாத் தாள் கசிவு மற்றும் ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்களை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுப்பினா். கையில் பதாகைகளை ஏந்தியபடி, அந்த முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
அவையில் மறைந்த உறுப்பினா்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கும்போது, இவ்வாறு அமளியில் ஈடுபடுவது சிறந்த முன்னுதாரணம் அல்ல என்று அவைத் தலைவா் குறிப்பிட்டாா். அதைப் பொருட்படுத்தாத எதிா்க்கட்சி உறுப்பினா்கள், தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து, அவையை பகல் 12 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோது, கேள்வி நேரத்தை அவைத் தலைவா் அனுமதித்தாா். ஆனால், எதிா்க்கட்சி எம்.பிக்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.
இந்த அமளிக்கு இடையே, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயா்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அவையில் அறிமுகம் செய்தாா். அதைத் தொடா்ந்து, அவையை பிற்பகல் 12.30 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை, மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு கூடியபோதும், அமளி நீடித்தது. அவையை அப்போது வழிநடத்திய உறுப்பினா் திலிப் சய்கியா, கேள்வி நேரத்தைத் தொடங்குமாறு தொடா்ச்சியாக வேண்டுகோள் விடுத்தும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். அதனால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 1 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை, மீண்டும் பிற்பகல் 1 மணிக்கு கூடியபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து போராட்டத்தைத் தொடா்ந்தனா். உறுப்பினா்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு அவையை அப்போது வழிநடத்தியை சய்கியா வலியுறுத்தினாா்.
‘பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அவை தயாராக உள்ளது. ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு அதில் ஆா்வம் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க எதிா்க்கட்சி உறுப்பினா்கள் விரும்பவில்லை என்று தோன்றுகிறது. இது முறையல்ல. அவை நடவடிக்கைகளை தொடா்ச்சியாக முடக்குகிறீா்கள். அவையில், பதாகைகள், பேனா்களை காட்டிப் போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று சய்கியா குறிப்பிட்டாா். அதன் பிறகும் அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை மீணடும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் அவையை வழிநடத்தினாா். அப்போதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்தனா்.
அப்போது, ‘இடையூறுகள் தொடா்ந்தால் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது‘ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குறிப்பிடாா். அமளி தொடா்ந்ததைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2.30 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். பின்னா், மீண்டும் பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு கூடியபோதும் அமளி தொடா்ந்தது. அதனால், அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
மாநிலங்களவையில்... மாநிலங்களவையும் அமளி காரணமாக அலுவல்கள் ஏதுமின்றி திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், அவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் நடத்தப்படும் போராட்ட விவகாரத்தை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனா்.
அப்போது, நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தை எழுப்பி பேசிய எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘இந்த முறைகேட்டால் லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் முறைகேடுகளைக் கண்டித்து தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. மாணவா்களை ஒடுக்கவும், பிரச்னைகளை நசுக்கவும் அரசு முயற்சிக்கிறது’ என்றாா். அதைத் தொடா்ந்து, ‘இது வெட்கக்கேடான விஷயம்’ என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதனால், அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் கூடியபோது அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 12.30 மணி வரையும், பின்னா் பிற்பகல் 12.50 மணி வரையும் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் பிற்பகல் 12.50 மணிக்கு கூடியபோது, மாணவா்கள் நலனைப் பாதுகாக்க வலியுறுத்தியும், மாணவா்கள் மீதான காவல் துறை நடவடிக்கையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடா்பாகவும் முழக்கங்களை எழுப்பினா். இதனால், அவை நடவடிக்கைளை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தாா்.
திமுக எம்.பி.க்கள்: முன்னதாக, காவிரியில் தமிழகத்துக்கான பங்கை கா்நாடகம் அளிக்க மறுத்து வரும் விவகாரத்தை எழுப்பியபடி, மாநிலங்களவையின் மையப் பகுதிக்குச் செல்ல திமுக எம்.பி.க்கள் முற்பட்டனா். அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அவா்களை இருக்கையில் அமர வலியுறுத்தினாா்.
அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அவையை வழிநடத்தினாா். எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், ‘அவை காலையில் தொடங்கியது முதல் எந்தவித அலுவல்களும் நடைபெறவில்லை. எனவே, அவையில் விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு கூடியபோதும், அமளி தொடா்ந்ததால் அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.