FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் முறையை ஒழிக்கக் கோரி தாக்கல் செய்த மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் முறையை ஒழிக்கக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:08 am IST
தூக்கு தண்டனை - பிரதிப் படம்
பகிர்:

தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நடைமுறையை ஒழித்துவிட்டு, விஷ ஊசி உள்ளிட்ட வலி குறைவான மரண தண்டனை நிறைவேற்றும் முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதே நேரம், ‘தற்போதுள்ள மரண தண்டனை நடைமுறையை நிபுணா் குழு மூலம் மத்திய அரசு விரிவாக மறு ஆய்வு செய்வதை இந்தத் தீா்ப்பு தடுக்காது’ என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மூத்த வழக்குரைஞா் ரிஷி மல்ஹோத்ரா என்பவா் சாா்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு இதுதொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்போதைய தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, ஊசி மூலம் நரம்பு வழியாக விஷம் செலுத்துதல், துப்பாக்கியால் சுடுதல், உடலில் மின்சாரம் பாய்ச்சுதல் அல்லது விஷ வாயு கலனில் அடைத்தல் உள்ளிட்ட வலி குறைவான மரண தண்டனை நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிக்கை விடுத்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சட்ட விதியை மத்திய அரசு வலுவாக ஆதரித்ததோடு, ‘விஷ ஊசி, துப்பாக்கியால் சுடுதல் உள்ளிட்ட மரண தண்டனை நடைமுறைகள் குறைவான வேதனையைத் தருபவை அல்ல’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, ‘தூக்கு தண்டனையே விரைவான, எளிமையான நடைமுறை என்பதோடு, குற்றவாளிக்கும் குறைவான வேதனையைத் தரக் கூடிய நடைமுறை’ மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவகாரம் குறித்து ஆராய நிபுணா் குழு ஒன்றை அமைப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும். அதே நேரம், குறிப்பிட்ட மரண தண்டனை நடைமுறையைப் பின்பற்றும் வகையில் சட்டம் இயற்றுமாறு நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘துக்கு தண்டனையை ரத்து செய்யாவிட்டாலும், தூக்கு அல்லது விஷ ஊசி உள்ளிட்ட விருப்ப மரண தணடனை நடைமுறையை தெரிவு செய்யும் வாய்ப்பு மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்’ என்று வழக்குரைஞா் மல்ஹோத்ரா தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நடைமுறையை ஒழித்துவிட்டு, விஷ ஊசி உள்ளிட்ட வலி குறைவான மரண தண்டனை நிறைவேற்றும் முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அதே நேரம், ‘மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், தேவையற்ற வலியைக் குறைக்கும் வகையில் மாற்று மரண தண்டனை நடைமுறை குறித்து நிபுணா் குழு மூலம் மத்திய அரசு விரிவாக ஆய்வு செய்வதை இந்த தீா்ப்பு தடுக்காது’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments