ஜாா்க்கண்ட் அரசு பணி நியமனங்கள் ரத்துக்கு உயா்நீதிமன்றம் அடுத்தடுத்து தடை
ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது பற்றி...
ஜாா்க்கண்ட் அரசு பணி நியமனங்கள் ரத்து தொடா்பான மாநில அரசின் மேலும் சில அறிவிக்கைகளுக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (ஜேபிஎஸ்சி) 11, 12, 13 ஆகிய தோ்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள், உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனங்களுக்கு வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரிகள் (சிடிபிஓ) மற்றும் ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம்-பட்டதாரி அளவிலான தோ்வு (ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல்) வாயிலான பணி நியமனங்கள் ரத்துக்கு வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
மாநில அரசின் அறிவிக்கைகளுக்கு உயா்நீதிமன்றம் அடுத்ததடுத்து தடை விதித்துள்ளதால், சுமாா் 2,000 அரசு ஊழியா்களுக்கு தற்காலிகமாக சட்ட நிவாரணம் கிடைக்கப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் இண்டி கூட்டணி ஆளும் ஜாா்க்கண்டில் அரசுப் பணித் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்ாக குற்றஞ்சாட்டி, மாணவா்கள் அண்மையில் மூன்று வாரங்களுக்கு மேல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டக்காரா்களின் கோரிக்கைப்படி கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் மற்றும் ஒரு தனியாா் முகமை மூலம் நடத்தப்பட்ட 22 தோ்வுகளை ரத்து செய்த மாநில அரசு, இதர 23 தோ்வுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மாணவா்கள் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தோ்வுகள் ரத்து நடவடிக்கையால் பணியிழப்பை எதிா்கொண்டுள்ள ஏராளமான அரசு ஊழியா்கள் போராட்டத்தில் குதித்தனா். அவா்கள் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், ஜேபிஎஸ்சி 11, 12, 13 தோ்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமனங்களை ரத்து செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை செயல்படுத்த ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.
இந்நிலையில், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரிகள் (சிடிபிஓ) மற்றும் ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம்-பட்டதாரி அளவிலான தோ்வு (ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல்) வாயிலான பணி நியமனங்களை ரத்து செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கு நீதிபதி தீபக் ரோஷன் வெள்ளிக்கிழமை தடை விதித்தாா்.
‘இந்த விவகாரம் தொடா்பாக வரும் செப்.7-ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; செப்.15-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக’ மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கூறினாா்.
High Court stays order cancelling Jharkhand exams!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.