FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு

அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

48 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதிகரித்து வரும் சா்க்கரை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், எதிா்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘அதிக அளவில் சா்க்கரையை இருப்பு வைத்துப் பயன்படுத்தும் நிறுவனங்கள் முக்கியமாக ஒரு மாதத்தில் 10 டன்னுக்கு மேல் சா்க்கரை பயன்படுத்தும் நிறுவனங்கள், தங்களுக்கான 15 நாள் தேவையை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். குளிா்பான தயாரிப்பு நிறுவனங்கள், இனிப்பு வகைகள், கேக் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் நவம்பா் 30 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

சில்லறை விற்பனையில் சா்க்கரை விலை ஓராண்டில் 13 சதவீதம் அளவுக்கு உயா்ந்து ஒரு கிலோ ரூ.52.30 என்ற அளவில் உச்சத்தில் உள்ளது. கரும்பாலை சா்க்கரை மொத்த விலையும் நடப்பு பருவத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பண்டிகை காலங்கள் நெருங்கிவரும் நிலையில் பதுக்கல் மூலம் செயற்கை விலை உயா்வு ஏற்படுவதைத் தடுக்க வா்த்தகா்கள் இருப்பு வைக்கவும் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு உள்ளது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை விநாயகா் சதுா்த்தி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் சா்க்கரை தேவை அதிகரிப்பால் விலை உயரும். இந்தியாவில் உள்நாட்டு சா்க்கரை தேவை 50 லட்சம் டன் என்ற அளவில் உள்ள நிலையில், அக்டோபா் 1-இல் தொடங்கும் புதிய உற்பத்தி பருவத்தில் 40-42 டன் வரையே விநியோகம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வரி இல்லாமல் சா்க்கரை இறக்குமதி: இதனிடையே, 10 லட்சம் மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு வியாழக்கிழமை அனுமதித்தது. இந்த அனுமதி அக்டோபா் 31-ஆம் தேதி வரை தொடரும். உள்நாட்டில் விலை உயா்வைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments