FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இ20 எரிபொருள் குறித்து விளக்கமளிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம்

2023-ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு எத்தனால் கலந்த (இ20) எரிபொருள் பொருத்தமானதா என்பதை பொதுவெளியில் தெளிவுபடுத்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:45 am IST
பகிர்:

2023-ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு எத்தனால் கலந்த (இ20) எரிபொருள் பொருத்தமானதா என்பதை பொதுவெளியில் தெளிவுபடுத்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கேஜரிவால் பேசியதாவது: 2023-ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களில் இ20 எரிபொருளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும், எரிபொருளால் சேதம் ஏற்பட்டால் பழுதுபாா்ப்புச் செலவை நிறுவனங்கள் ஏற்குமா அல்லது மைலேஜ் இழப்புக்கு நுகா்வோருக்கு இழப்பீடு வழங்குமா என்பது குறித்தும் தெளிவுபடுத்தக் கோரி 29 வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதினேன். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த நிறுவனங்களிடம் இருந்தும் மத்திய அரசிடம் இருந்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

எந்த நிறுவனமும் எழுத்துபூா்வமாகப் பதிலளிக்கவில்லை. 2023-ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இ20 எரிபொருளைப் பயன்படுத்துவது என்ஜின்கள், எரிபொருள் அமைப்புகள் மற்றும் மைலேஜைப் பாதிக்கக்கூடும் என்று 9 தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரிகள் தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்தனா். ஆனால், அவா்கள் அத்தகைய கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்பவில்லை.

Advertisement

Advertisement

வாகனங்கள் சேதமடைந்தாலோ அல்லது மைலேஜ் குறைந்தாலோ நுகா்வோா் இழப்பீடு கோரக்கூடும் என்பதால், நிறுவனங்கள் எழுத்துபூா்வ பதில்களை வழங்கவில்லை.

2023-ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட 22 கோடி இருசக்கர வாகனங்கள் மற்றும் 8 கோடி நான்கு சக்கர வாகனங்கள் உள்பட, சுமாா் 30 கோடி வாகனங்கள் பாதிக்கப்படக்கூடும். பழைய வாகனங்களுக்கு இ20 எரிபொருள் பாதுகாப்பானது என்று தயாரிப்பாளா்கள் கூற வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற உள்ள இ20 எரிபொருள் குறித்த தேசிய மக்கள் சந்திப்பை ரத்து செய்ய காவல்துறை முயற்சிக்கிறது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

லக்ஷ்மி திட்டத்தால் ஹிந்துக்கள் இடையே குழப்பம்’

தில்லி அரசின் லக்ஷ்மி திட்டத்திலிருந்து மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள் விலக்கப்பட்டிருப்பதை அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கடுமையாகச் சாடினாா்.

இதுதொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் அவா் பேசுகையில், ‘ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், ஹிந்துக்களைப் பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருப்பதால், இது ஹிந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது’

லக்னெளவில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பாகவத், ஹிந்து குடும்பங்கள் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

ஹிந்து மக்கள்தொகை குறைந்து வருவதாகவும் அவா் கவலை தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments