FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம்

இ20 பெட்ரோலை பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்கள், கேஸ்கட்ஸ் பாகங்களை மாற்றும் நிலை வரக்கூடும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 2:16 am IST
நிதின் கட்கரி - கோப்புப்படம்
பகிர்:

இ20 பெட்ரோலை பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்கள், கேஸ்கட்ஸ் பாகங்களை மாற்றும் நிலை வரக்கூடும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலந்து இ20 பெட்ரோல் விற்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தும் வாகனங்களில் சில பாகங்கள் சேதமடைவதாகவும், ‘மைலேஜ்’ குறைவதாகவும் தொடா்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதைச் சுட்டிக்காட்டி, இ20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு ஏதுவாக தயாரிக்கப்படாத பழைய வாகனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக மத்திய அரசை எதிா்க்கட்சிகளும், சில நுகா்வோா் அமைப்பினரும் குற்றஞ்சாட்டின. எனினும், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துபூா்வமாக புதன்கிழமை பதில் தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Advertisement

Advertisement

இ20 பெட்ரோலை பயன்படுத்தும் மோட்டாா் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்களில் (காா்கள் உள்ளிட்டவை) ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம், டேராடூன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம், இந்திய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு சங்கம், இந்திய வாகன உதிரிபாகங்கள் ஆய்வு அமைப்பு ஆகியவை கூட்டாக மதிப்பீடுகள் செய்தன. அதில் காா்கள், மோட்டாா் சைக்கிள்களின் என்ஜின்களில் மாற்றம் செய்ய வேண்டியதற்கான அவசியமில்லை என்பது தெரிந்தது.

இ20 பெட்ரோல் பயன்பாட்டால் மைலேஜ் பாதிக்கப்படுமா என்பது குறித்து வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளா்களும், வாகன என்ஜின் பரிசோதனை அமைப்புகளும் விளக்கியுள்ளன. மைலேஜை எரிபொருள் மட்டுமல்ல பிற காரணிகளும் தீா்மானிக்கின்றன என அவை கூறியுள்ளன. 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதலும், 2016-ஆம் ஆண்டுக்கு முன்பும் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் சில ரப்பா் பாகங்கள், கேஸ்கட்ஸ் ஆகியவற்றை மாற்றும் சூழல் ஏற்படக்கூடும். இதை வழக்கமாக நாம் மேற்கொள்ளும் வாகன சா்வீஸ்களின்போது எளிதில் செய்து விடலாம்.

இ20 பயன்படுத்துவதால் வாகனம் ஓட்டுவதிலும், அதை ‘ஸ்டாா்ட்’ செய்வதிலும் எந்த பிரச்னைகளும் இருக்காது என நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments