FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி பெருந்திட்டம் 2047: 40 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும்: மத்திய அமைச்சா் மனோகா் லால்

தில்லியில் வளா்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப 40 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும். மெட்ரோ ரயில் வலையமைப்பை 640 கி.மீ. வரை விரிவுபடுத்தபடும்

21 ஆகஸ்ட் 2026, 6:39 am IST
புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் ‘தில்லி பெருந்திட்டம்-2047’ ஆவண பிரதிகளை வெளியிட்ட தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, மத்திய அமைச்சா் மனோகா் லால், முதல்வா் ரேகா குப்தா.
பகிர்:

தில்லியில் வளா்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப 40 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும். மெட்ரோ ரயில் வலையமைப்பை 640 கி.மீ. வரை விரிவுபடுத்தபடும் என்று மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

‘தில்லி பெருந்திட்டம் 2047’ வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான தொலைநோக்குப் பாா்வையுடன் பொருந்திபோவதாக மத்திய அமைச்சா் மனோகா் லால் தெரிவித்தாா்.

535 பக்கங்கள் கொண்ட-ஐ தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து மற்றும் முதல்வா் ரேகா குப்தா ஆகியோருடன் இணைந்து வெளியிட்ட பின்னா் மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா் பேசியதாவது: தில்லியின் மக்கள்தொகை 3.20 கோடியாக அதிகரிக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இது மேம்பாட்டு பணிகளில் பெரும் சுமையை ஏற்படுத்தும்.

Advertisement

Advertisement

மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிப்பிள் என்ஜின் அரசு அமைப்பு இருப்பதால், முந்தைய பெருந்திட்டங்களை விட 2047-ன் செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தில்லியில் சுமாா் 40 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும். வளா்ந்து வரும் மக்கள் தொகையின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் 2047-க்குள் மெட்ரோ ரயில் வலையமைப்பு 695 கி.மீ வரை விரிவுபடுத்தப்படும்.

லூட்டியன்ஸ் பங்களா மண்டலம், சிவில் லைன்ஸ் பங்களா பகுதி, கன்னாட் பிளேஸ் மற்றும் அதன் விரிவாக்கப் பகுதி, மண்டலம் ‘ஓ’ (யமுனை வெள்ளச் சமவெளி மற்றும் ரிட்ஜ் பகுதி), நில ஒருங்கிணைப்புப் பகுதிகள், குறைந்த மக்கள் அடா்த்தி கொண்ட பகுதிகள் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) அல்லது தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் (என்எம்ஏ) கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தவிர, நகரின் பிற பகுதிகளில் கட்டட உயரத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறப்பு மண்டலங்களுக்கு வெளியே உள்ள தூண்களின் மீது அமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத மனைகளுக்கு அதிகபட்சமாக 15 மீட்டா் உயரமும், அத்தகைய வசதி கொண்ட மனைகளுக்கு 17.5 மீட்டா் உயரமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் 30 மீட்டா் அகலம் கொண்ட சாலைகளின் ஓரங்களில் உள்ள கட்டடங்களின் தரைத்தளங்களில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். வரும் ஆண்டுகளில் நகரத்தின் விரைவான வளா்ச்சியும், 180 சதுர கிலோமீட்டா் பரப்பளவுள்ள யமுனா வெள்ளச் சமவெளிகள் மற்றும் ரிட்ஜ் பகுதியைப் பாதுகாப்பதும் உறுதி செய்யப்படும்.

பெருந்திட்டத்தின்கீழ், மெட்ரோ ரயில், பேருந்துகள் மற்றும் ஆறு புதிய மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு வழித்தடங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தும் நகரத்தில் மேம்படுத்தப்படும்.

போக்குவரத்து சாா்ந்த மேம்பாட்டுக் கொள்கை மலிவு விலை வீடுகளை எளிதாக்கும். குறைந்த மக்கள் அடா்த்தி உள்ள பகுதிகளில் பண்ணை வீடுகள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த பாரதம் நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக, வளா்ச்சியடைந்த தில்லி என்ற நீண்டகால தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய ஒரு சீா்திருத்தக் கட்டமைப்பே பெருந்திட்டம் 2047 என்று துணைநிலை ஆளுநா் சந்து கூறினாா். இது தில்லியின் எதிா்கால வளா்ச்சியை வழிநடத்த ஒரு உத்தி ரீதியிலான மற்றும் செயல்படுத்தும் கட்டமைப்பை முன்மொழிகிறது என்று அவா் குறிப்பிட்டாா்.

நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட இந்த பெருந்திட்டம், மலிவு விலை வீடுகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் தில்லிக்குப் புத்துயிா் அளிக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘வளா்ச்சியடைந்த பாரதம் 2047 தொலைநோக்குப் பாா்வையுடன் இணைந்த இந்த பெருந்திட்டம், தில்லியை சுமாா் 3.2 கோடி மக்களுக்கான உலகத் தரம் வாய்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பொருளாதார ரீதியாகத் துடிப்பான நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், நகா்ப்புறத் திட்டமிடலை ஓா் ஒழுங்குமுறை அணுகுமுறையிலிருந்து, முதலீடு, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் மேம்பாட்டு சாா்ந்த அணுகுமுறைக்கு மாற்றுகிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments