தனிப்பட்ட விவரங்கள் வெளியான விவகாரம்! வலதுசாரி ஆர்வலருக்கு எதிராக சிஜேபி வழக்கு!
தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட வலதுசாரி ஆர்வலருக்கு எதிராக சிஜேபி செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் வழக்கு...
தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட்ட வலதுசாரி ஆர்வலருக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, தில்லியில் சிஜேபி நடத்திய போராட்டம் நாடு முழுவதும் ஆதரவு பெற்று மாபெரும் மாணவர் போராட்டமாக உருவானதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, சிஜேபி மற்றும் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நாட்டின் பல்வேறு வலதுசாரி அமைப்புகள் இணையத்தில் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில், சிஜேபி தலைமைச் செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸின் தனிப்பட்ட விவரங்களை வலதுசாரி ஆர்வலர்கள் இணையத்தில் வெளியிட்டதால், சில ஊடகங்கள் அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்குள்ள காட்சிகளை ஒளிபரப்பினர். இதற்கு, ஏராளமான எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், வலதுசாரி ஆர்வலரான அபிஜித் ஐயர் மித்ரா மற்றும் பல்வேறு சட்ட, ஊடகத் தளங்கள் தனது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தனது உரிமைகளை மீறியதாகக் கூறி அவர்களுக்கு எதிராக சௌரவ் தாஸ் இன்று (ஆக. 21) தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அபிஜீத் ஐயர் மித்ரா, ஏராளமான எக்ஸ் கணக்குகள், பலவேறு சட்ட இணையதளங்கள் மற்றும் ஊடகத் தளங்கள் தனது வீட்டின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதைத் தடுக்குமாறும்; ஏற்கெனவே, தனது விவரங்கள் வெளியான பதிவுகளை நீக்க எக்ஸ் மற்றும் கூகுல் நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் சௌரவ் தாஸ் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்துடன், தனது ஊடகப் பணிகளால் தனக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படுவதால் தனக்கு எதிரான வன்முறைகளுக்கான அபாயம் அதிகரித்துள்ளதாக, சௌரவ் தாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sourav Das, spokesperson of CJP, has filed a petition in the Delhi High Court against a right-wing activist.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.